பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சங்ககாலத் தமிழ் மக்கள்

ஆடவர்கள் உழைப்பின்றிச் சோம்பி இருப்பார்களானால், அந்நாடு ஒரு பயனும் தருதலில்லை. ஆகவே, நிலத்தைப் பற்றிய முறையில் அதனை வளமுடையதாகவும் வளமற்றதாகவும் பிரித்துப் பேசுதல் பொருந்தாதெனவும், நல்ல நினைவும் நல்ல உழைப்புமுடைய ஆடவர்கள் எந்த நிலத்தில் வாழ்கின்றார்களோ, அந்த நிலமே நற்பயன் தருமெனவும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் உய்த்துணர்ந்தனர். நிலமானது, நீர் வளமுடைய நாடு, மரஞ்செறிந்த காடு, மேடு, பள்ளம் எனப் பல்வேறு இயல்புகளை உடையதாதல் கருதி அந்நிலப் பகுதியினை ‘நன்னிலம்’ எனப் பாராட்டியும், ‘புன்னிலம்’ எனப் பழித்தும் பொது மக்கள் பேசுவார்கள். வளமில்லாத நிலமாயிருந்தாலும், நல்ல நினைவும் உழைப்பும் உடைய ஆடவர்கள் வாழ்ந்தால், நல்ல பயன்களைத் தருமெனவும், வளமார்ந்த நன்னிலமாயினும், தீய நினைவும் சோம்பலுமுடைய தீயவர் வாழ்ந்தால், ஒரு சிறிதும் பயன்படாதெனவும் உய்த்துணர்ந்த ஒளவையார், “நிலமே, நீ நாடாய் இருந்தாலும், காடாய் இருந்தாலும், மேடாய் இருந்தாலும், பள்ளமாய் இருந்தாலும், நினக்கு என நன்மை தீமையினை உடையை அல்லை. நின்பால் வாழும் ஆடவர்கள் எங்கெங்கே நல்ல எண்ணமும் உழைப்பும் உடையவர்களாய் விளங்குகின்றார்களோ, அவ்வவ்விடங்களில் நீயும் நல்ல பயனைத் தருகின்றாய். ஆதலால், நீ இனிது வாழ்வாயாக!” என ஒரு புறப்பாடலால் (187) நிலத்தை வாழ்த்துகின்றார். இவ்வாழ்த்து ஆடவர்களின் நன்முயற்சியால் நில இயல்பு வளம் பெறும் உண்மையினை நன்கு விளக்குதல் காணலாம்.

நல்ல வளமுடைய நாடாயினும், மனநலமில்லாது அறமல்லாதன செய்யும் ஆடவர்களைப் பெற்றிருக்கு-