பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படியான கொத்தளங்களும் உண்டு. ஆரஞ்சுப் பழம் அளவில் உள்ள பீரங்கிக் குண்டுகளை இன்றுகூட அங்கே காணலாம். மேலே தானியக் கிடங்குகளும் பகைவர்களை அடைத்து வைக்கும் இருட்டறைகளும் இருக்கின்றன. உச்சி வரையிலும் போவதற்கு வேண்டியவாறு அங்கங்கே படிகள் இருக்கின்றன. மலை ஏறும்போது பாதி வழியில் ஒரு பெரிய குகை உண்டு. அதற்குள் யாருமே போகப்பயப்படு வார்கள். உள்ளே ஒரே இருட்டாக இருப்பதோடு பெரிய பெரிய கருவண்டுகள் இருக்குமாம். அவை கொட்டினால் உயிருக்கே ஆபத்தாம். அந்தக் குகை எங்கு போய் முடிகின்றது என்பதை யாரும் இதுவரை ஆராய்ந்து பார்க்கவில்லை. ஆனால் அது வெகு தாரம் செல்லுகின்றதாம். பகைவர்கள் கோட்டையைத் தாக்கும் போது அவர்கள் வெற்றிபெற்று விடுவார்கள் என்று தோன்றினால் திப்புசுல்தானோ அல்லது அவனுடைய முக்கியமான தளபதிகளோ அந்தக் குகை வழியாக வெளியே தப்பிச் சென்று விடுவார்களாம். அந்தக் குகைக்குள்ளேதான் திப்புசுல்தான் ஏராளமான தங்கக் காசுகளையும் நகைகளையும் மறைத்து வைத்திருப்பதாக எல்லாரும் பேசிக் கொள்வார்கள். அந்தப் பக்கத்தில் யாராவது எதிர்த்து வந்தால் அவர்களோடு போர் செய்ய வீரர்களைத் திரட்டப் பணம் வேண்டுமல்லவா? அதற்காக சுல்தான் முன் ஜாக்கிரதையாக அங்கே வைத்திருக்கிறானாம்.. ஆனால் திப்புசுல்தான் மைசூரிலிருக்கும் ஸ்ரீரங்கபட்டணத்திலே ஆங்கிலேயர்களோடு சண்டையிட்டு அதிலே இறந்து! போன பிறகு இந்தக் கோட்டைக்கு இருந்த பெருமை யெல்லாம் போய் விட்டது. அவன் மறைத்து வைத்திருந்த புதையலைக் கண்டுபிடிக்க எத்தனையோபேர் முயற்சி செய்தும் யாருக்கும் அது கிடைக்கவில்லை.

இந்த விவரங்களையெல்லாம் ஒன்று விடாமல் தங்கமணி தன் நாட் குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டான். இவற்றைச் சேகரிக்கப் பலபேரிடமிருந்து அவன் கேட்கும் போது ஏதோ துப்பறியும் நிபுணனைப் போல ஜின்கா பக்கத்திலிருந்து கவனமாகக் கேட்கும். தங்கமணியின் முகத்தையும் அவனோடு பேசியவர்களுடைய முகத்தையும் மாறிமாறி அது

15