பக்கம்:சங்ககிரிக் கோட்டையின் மர்மம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



[10]

குகையின் ரகசியம்!

எல்லாரும் குகையை நோக்கி ஆவலோடு புறப்பட்டனர். கீழே இறங்குவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. மேலும் குகையைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தால் சீக்கிரமாகவே அங்கு போய்ச் சேர்ந்தார்கள்.

வெளியில் நல்ல வெளிச்சம் இருந்தும் குகைக்குள்ளே ஒரே இருட்டாக இருந்தது. தங்கமணி டார்ச் விளக்கைப் போட்டுக் கொண்டே உள்ளே எச்சரிக்கையாக நடந்தான். ஜின்கா அவனைத் தொடர்ந்து சென்றது.

கண்ணகி அடுத்தபடியாகச் சென்றாள். சுந்தரம் “நான்தான் பின்னணி மெய்காப்பாளன்” என்று கூவிக் கொண்டே பின்னால் நடந்தான் அவன். கூவியதின் எதிரொலி குகையில் உள்பக்கத்திலிருந்து பயங்கரமாகக் கேட்டது.

சில இடங்களில் குனிந்து செல்ல வேண்டியிருந்தது. ஓரிடத்திலே தண்ணீர் சொட்டிற்று. அதனால் அந்த இடத்திலே ஏதோ நெஞ்சு கலங்கும்படியான ஓர் ஒலி கேட்டது.

“அண்ணா” என்று கண்ணகி தங்கமணியின் கையைப் பற்றினாள்.

“அது ஒன்றும் இல்லை. தண்ணீர் சொட்டுவதால் உண்டாகும் சத்தத்தின் எதிரொலிகள் மாறிமாறி உள்ளேயே சுற்றுவதால் இப்படி வினோதமான ஒலி கேட்கிறது” என்று தங்கமணி அவளுக்குத் தைரியம் ஊட்டினான். அவனுடைய பேச்சும் விநோதமாக எதிரொலித்து அவன் கூறியதை உண்மையென்று காட்டிற்று.

வௌவால்கள் உள்ளிருந்து திடீர் திடீர் என்று பறந்து வெளியே ஓடின. ஆனால் அவை யார் மேலும் மோதாமல்

29