பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௦. உறையன்

உறையன் என்ற இப்பெயர், புலவர் தம் இயற்பெயரா அல்லது காரணப்பெயரா என்பதை அறிந்து கொள்வதற்கில்லை. இவர் பாடிய பாட்டாகக் குறுந்தொகைக்கண் வந்துள்ள ஒரு பாட்டே கிடைத்துளது.

தன் இனத்தைக் காணமாட்டாது கலங்கி நின்று அதைப் பல்காலும் கூவி அழைக்கும் பருந்தின் தனித்த குரலொலி தவிர, வேறு ஒலி எதையும் கேட்காத கொடுமையுடையது பாலைப் பெருவழி எனப் புலவர் கூறுவது நினைவு கூரற்பாற்று. அத்தகைய பாலைநிலத்தில், கற்பாறைகளுக்கு இடையிடையே நுழைந்து நுழைந்து மக்கள் நடப்பதால் உண்டாம் சிறு வழியே, அந் நிலத்துவழியாம்; அத்தகைய வழியில் சென்று விட்டான்; ஒரு தலைவன். சென்றவன் தலைவியிடம் கூறாமலே சென்றுவிட்டான். இதை அறிந்த தலைமகள் தோழி, தலைமகளுக்கு உணர்த்தினாள்; தோழி உரைப்பதற்கு முன்னரே, தலைமகள்பால் அதை உணர்த்தினார் பலர்; உணர்த்தினார் பலராயினும், அவருள் ஒருவராவது சென்ற தலைவனைத் தடுத்து நிறுத்தினாரல்லர் ; இதனால் சினங்கொண்ட தலைவி, தோழி அதைவந்து உரைத்தக்கால், இவ்வாறு அவர் சென்றார் எனவந்து உரைத்தவர் பலராவர்; அவர்கள் எல்லாம் என்பால் அன்புடையர் தாம் எனக் கூறித் தன் வெறுப்பினை உணர்த்துவாளாயினள் எனப் பாடியுள்ளார் புலவர்.

“செப்பினம் செவினே, செலவரி தாகும் என்று
அத்த ஓமை அங்கவட் டிருந்த
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரம்செல் மாக்கட்கு உயவுத்துணை யாகும்
கல்வரை அல்லது தொல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.”

(குறுங்: ௨௦௭)