பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அதியன் விண்ணத்தனார்

லாயினள்; தலைவியின் இங்நிலையினை அறிந்தான்; இனியும். அவளை மறைத்துப் பயனில்லை; அவளுக்கு உணர்த்திப் பிரிவதே நலம் எனக் கொண்டான்; அன்புரை பல வழங்கி அழைத்தான்; அவன்பால் செல்லவும் அவட்குத் துணிவு உண்டாகவில்லை; மேலும் பிரியப் போகும் அவன் பால் செல்ல அவள் உள்ளமும் விரும்பவில்லை; எனினும் அழைத்தவழிப் போகாதிருத்தல் பண்பன்று: ஆகவே, அவள் நாணம் முன்நிற்க, மெல்ல அடியிட்டு அருகே சென்று நின்றாள் வந்து நின்றனளே அன்றி, எங்கே போகின்றீர்கள்? எப்போது போகின்றீர்கள்? எப்போது மீள்வீர்கள்? என்று கேட்பதோ அல்லது போதல்கூடாது எனத் தடுப்பதோ செய்திலள்; எதையோ எண்ணி இருப்பாள்போல் நெடிதுநேரம் நின்றுகொண்டிருந்தாள் ;பின்னர்த் திடுமென, கயிறு ஆட்ட ஆடிக்கொண்டிருந்த அழகிய பாவையொன்று அக்கயிறு அற, அடியோடு வீழ்ந்தாற். போல், அவன் ஆகத்தே வீழ்ந்துவிட்டாள்; வீழ்ந்த அவளை அணைத்துக்கொண்ட அவன் உள்ளம், பிரிவை மேற் கொள்ளும் உரன் இழந்துவிட்டது; ஈரிய மண்ணால் செய்யப்பெற்று, அவ்வீரம் புலராத ஒரு மட்கலம், மழை நீரை ஏற்றவழி, அந்நீரோடு தானும் உருவு தெரியாமல் அழிந்து கரைந்து ஒன்று கலந்து விடுவதைப்போல், அன்பே உருவாய், அவ்வன்பு அகலா உள்ளத்தனாய அவன், பெண்ணிற் பெருந்தகையாளாய அவள் துயர் கண்டவுடனே, தன்னிலை இழந்து அவள் வயத்தனாகிவிட்டான். இந்த அழகிய காட்சியை ஓவியப்படுத்திக் காட்டியுள்ளார் புலவர்:

செலவுரை வுற்ற அரவம் போற்றி
மலரேர் உண்கண் பனிவர ஆயிழை
யாம்தற் கரையவும் நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து
வினவலும் தகைத்தலும் செல்லா ளாகி
வெறிகமழ் துறுமுடி தயங்க நல்வினைப்
பொறியழி பாவையிற் கலங்கி, நெடிதுநினைந்து