பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௦. ஓரம்போகியார்

ஓரம்போகியார் வரலாறு குறித்து ஒன்றும் தெரிந்திலது; இவர் இயற்பெயர், ஓரம்போதியார் என்றும் ஓரேர்போகியார் என்றும் ஏடுகளில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஓரம்போகியார் மருதத்திணையைப் பாடுவதில் சதுரப்பாடுடையவர்; இவர் இயற்றிய பாக்கள் நூற்றுப் பத்து. நற்றிணையில் இரண்டு; குறுந்தொகையில் ஐந்து; ஐங்குறு நூற்றில், மருதத்திணை குறித்து வந்த முதல் நூறு; அகத்தில் இரண்டு; புறத்தில் ஒன்று.

தலைமகள் ஒருத்தி, தங்கள் நாட்டு அரசன் வாழ வாழ்த்தினாள் எனப்பாடிய பாக்கள் அனைத்தினும், “வாழி ஆதன், வாழி அவினி” எனச் சேரவேந்தன் ஒருவனையே எடுத்துக்காட்டியிருப்பதால், புலவர் ஓரம்போகியார் சேர நாட்டினர்; அச் சேரவேந்தன்பால் பேரன்புடையவர் எனக் கோடல் பொருந்தும். ஆதன் என்பது சேரமன்னர்களின் குடிப் பெயர்களுள் ஒன்று; இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்ற பெயர்களை நோக்குக. அவினி என்பான், அச் சோர்குடி வந்த ஓர் அரசனாவன். ஆதன் அவினியையே யல்லாமல், சோழரையும், அச்சோழர் குடிவந்த கிள்ளியையும், அச்சோழர்க்குரிய ஆமூரையும், பாண்டியரையும், அவர்க்குரிய தேனூரையும், விரான், மத்தி என்ற தலைவர்களையும், அவர்களுக்கு உரிய இருப்பை, கழார் என்ற ஊர்களையும், காவிரி, வையை போன்ற பேராறுகளையும், இந்திரவிழாப்போலும் பெருவிழாக்களையும் உணர்ந்து பாராட்டியுள்ளார் புலவர்.

சோழர், வெல்லும் போர்வல்லவர் ; அச்சோழர் குடிவந்த கிள்ளி, ஒளிவீசும் இலையினையுடைய வேற்படையும், விரைந்து செல்லும் குதிரைப்படையும், பகைவர் மதிலை அழிக்கவல்ல பானைப்படையும் உடையவன்; அச்சோழர்க்-