பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

2. அந்தி இளங்கீரனூர்

இளங்கீரனார் என்ற பெயருடையார் பலராவர்; எயீனந்தை மகனார் இளங்கீரனார், பொருந்தில் இளங்கீரனார் என்பார் பெயர்களை நோக்குக. இவர் பெயர்க்கு முன் வரும் அந்தி என்ற சிறப்பு, இவர் அந்திக் காலத்தை விளங்க உரைத்ததோடு, அவ் அந்தி என்ற சொல்லையும் எடுத்து ஆண்டமையால் வந்தது போலும்.

அந்தி இளங்கீரனார், அழகிய உவமைகளை அடுக்கடுக்காக அமைத்துப் பாடவல்லவராவர்; மாலை வந்துற்றதும், தாம் இதுகாறும் இருந்து தேன் உண்ட மலர்கள், தேனொழியப் பெற்றமையால், அவற்றை விட்டுப் பிரிந்து, புதிதாக மலரும் மலர் நாடிச்செல்லும் வண்டினங்கள், தாம் நட்பும் கொண்டு வாழ்ந்தார், தமக்கு மேலும் பொருள் அளித்துப் பேணா வறுமையுற்றனர் என அறிந்து, அவரைக் கைவிட்டு நிறைந்த பொருளுடையாரைத் தேடிச் செல்லும் நன்றியறிவில்லா மாக்கள் போலும் எனக்கூறும் உவமை, “உறின்நட்டு, அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை” என்ற திருக்குறட் டொடரை நினைப்பூட்டிச் செல்லுதல் நோக்குக.

“நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன்இன் மையின் பற்றுவிட்டு ஒரூஉம்
நயன்இல் மாக்கள் போல, வண்டினம்

சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர.”

அந்திக் காலத்து வானம். சிறிது சிறிதாகச் செந்திறம் பெற்றுச் சிறத்தல், உலையிற் காய்ச்சிய செம்பொன் ஆற ஆறச் செந்திறம் பெற்றுத் திகழ்தல் போலும் எனக் கூறும் உவமையும்,

“பையென, வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப.”

இத்தொடரில், அந்திக்காலம் செந்திறம் பெற்றுசி சிவந்து தோன்றிற்று என்பதை “அந்தி பூப்ப” என்ற தொடரால் விளக்கிய அழகினை உணர்க. தலைவனைப் பிரிந்தமை