பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அதியன் விண்ணத்தனார்

செல்வம் கொழித்தல் வேண்டும்; உணவாகிப் பயன் தருதலோடு உழைப்பாலும் நாட்டிற்கு நலந்தருவன கால்நடைகளாம்; ஆகவே, கால்நடைச் செல்வங்களைக் கருத்தூன்றிப் போற்றியுள்ளார் புலவர். 'பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!' என வாழ்த்தியுள்ளமை நோக்குக.

ஒரு நாட்டு மக்கள் பசியும், பிணியும், பகையும் ஒழிந்து வாழ்வதே அந்நாட்டின் நற்பண்பாம்; பிணியும், பகையும் வளர்தற்குத் துணைபுரிவது பசி, பசித்த உடலில் பலகோடி நோய்கள் இடம்பெறும் பகுத்துணர் அறிவு, பசித்தாரிடையே நிலைபெறுதல் இன்றாம்; மாறாக அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்றன இடம் பெற்றுவிடும். "குடிப் பிறப்பழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்; நாணணி களையும்; மாணெழில் சிதைக்கும்.....பசிப்பிணி யென்னும் பாவி" எனப் பிறரும் பசியினைப் பழித்தல் காண்க. ஆகவே, பசி, பிணி, பகையாகிய பாவங்கள் மூன்றனுள், முதற்கண் ஒழிக்கப்படவேண்டுவது பசியே. அது ஒழிந்த நாட்டு எல்லைக்கண் நிற்கவும் பிணி அஞ்சும். பசியும், பிணியும் அற்ற நாட்டின்மீது பகைகொண்டார் பாழுறுதல் திண்ணம். ஆகவே, "பசியில் லாகுக! பிணிசேண் நீங்குக" என்ற புலவர், அந்நாட்டின்மீது பகைகொண்டு வருவாரும் தோற்று, தோல்விக்கறிகுறியாகப் புல்லரிசியுண்டு புன்மை யுறுவாராக என்றும் கூறியுள்ளார்.

ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய ஒழுக்கத்தில் நிற்றல் வேண்டும், ஒதிய ஒழுக்கத்தைக் கைவிட்டு மக்கள் ஒழுக்கநெறி குன்றிய நாட்டில் ஒற்றுமை கெடும்; ஒற்றுமை கெட்ட நாட்டில் அமைதி குன்றும் குழப்பம் உண்டாம்; அகத்தே அமைதியற்ற நாடு, உள்நாட்டுக் குழப்பத்தால் உருக்குலைந்த நாடு, அரிய அரணும், ஆற்றலும், அளவற்ற பொருளும், பொன்னும் உடைத்தாயினும் பயனின்றாம்; அந்நாடு மாற்றார் கைப்பட்டு மாண்பிழத்தல் உறுதி; ஆகவே நாட்டு மக்கள், ஒழுக்கநெறி நிற்றல் இன்றியமையாதது என்பதை