பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரம்போகியார்

133


அத்தகைய பெரியார்பால் பொய் முதலாம் அறமல்லன. காணல் என்றும் இயலாது; அத்தகையாரிடத்திலேயே, பொய்யும், வழுவும் புகுந்துவிடுமாயின், உலகில், மெய் முதலாம் அறம் நிற்றல் அரிதாம்; அவற்றை யாண்டும் காணல் இயலாது. "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அது இன்றேல், மண்புக்கு மாய்வது மன்." அவரிடையே அறமல்லன தோன்றிவிடுமாயின் உலகமே அழியும் என்று கூறுகிறார் வள்ளுவர்.

இவ்வரும் பெரும் உண்மையினைப் புலவர் ஒரம்போகியார் தோழி யொருத்தியின் வாய்வைத்து விளக்கியுள்ளார். ‘’இவளை விரைவில் வந்து வரைந்துகொள்வேன்; அந்நாள்வரை, இவளைப் போற்றிக்காத்தல் நின் கடன்: இவளும், யானும் நின் அடைக்கலம்‘’ எனக் கூறிக் கொண்டே, தோழியின் கைகளைப் பற்றினான் ஒரு தலைவன். உலகத்துச் சூளுறுவார், பசுவையும், பார்ப்பாரையும், பெண்டிரையும் தொட்டுச் சூளுறுவராதலின், தலைவன் தன் கைப்பற்றியதனத் தோழி, சூளுறுவாகக் கருதினாள்; கருதியவள் தலைவனை நோக்கி, ‘’ஐய! அறணல்லவற்றை என்றும் விரும்பா உள்ளம், ஒரோவழி மயங்கி விரும்புமாயினும், கல்வி, கேள்வியாயை அறிவே அங்குச மாக, அவ்வுள்ளமாகிய யானையை மீட்டு, அறமும், பொருளும் வழுவாவகை ஆராய்ந்து, தம் தகுதியினையும் உணர்ந்து, அதன் பின்னரே, தாம் எண்ணியதை முடிக்க முயல்வர் பெரியோர். அத்தகைய பெரியோர்களுள் ஒருவன் நீ; நின்னையொத்த பெரியோரிடத்தும் பொய்யும் வழுவும் தோன்றுமாயின், உலகத்தில் எங்குத்தான் மெய்யைக் காணல் இயலும். நின்பால் அவை தோன்றா; பொய்யும், வழுவும் உடையாரன்றோ சூளுறுதல் வேண்டும்? வரைவேன் என்று கூறியதொன்றே அமையாதோ? மெய்யல்லது அறியாத நீயும் சூளுறல் வேண்டுமோ‘’? என்று கூறினாள் எனப் பாடியுள்ளார். எவ்வளவு பெரிய உண்மையினை இவ்வளவு எளிமையாக விளக்கியுள்ளார். நோக்குக!