பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௬. கண்டரதத்தன்

கண்டரதத்தன் என்ற இப்பெயர் இவர்க்கு ஏன் உண்டாயிற்று என்பது விளங்கவில்லை; இது காரணப்பெயரா? அல்லது இயற்பெயரா என்பதையும் அறிந்து கொள்வதற்கு வழியில்லை; மதுரையில் வாழ்ந்த புலவர்களுள் இவரும் ஒருவர். இவர் பெயரால் நமக்குக் கிடைத்தது, குறுந்தொகைக்கண் வந்துள்ள ஒரு செய்யுளே.

கருமையும் வெண்மையும் கலந்து காண்டற்கினிய மரையாவின் ஏறு, மடம் மிகவுடையது; நெல்லிக்கனி புளிச்சுவையுடையது. ஆயினும், அதைத் தின்று நீர்குடித்தார்க்கு இன்சுவை தருதலின், இனிய புளிச்சுவையுடையது; நெல்லியின் இயல்புணர்ந்த மரையா, அதைத் தின்று பின்னர்ப் பைன்சுனைப் பனிநீர் பருகும் பண்புடையது; சுனையில் நீர் உண்புழி, ஆங்கு நீர் தெரியாவண்ணம் மலர்ந்து மறைத்து நிற்கும் மலர்களைத், தன் பெருமூச்சால் விலக்கி உண்ணும் எனக் கூறும் இயற்கைக் காட்சிகள் இனிமை உடையனவாதல் காண்க. தன் பெய்தற்றொழிலால் உலகத்தையே அழிக்கவல்ல மழையும், வடக்கிருந்து வந்து வீசும் வாடையின் கொடுமைக்கு ஆற்றாது தென்திசை நோக்கி ஓடும் என்றால், மென்மைநிறை மகளிராய நாம், தலைவரையும் பிரிந்து தனித்து இருக்குங்கால், அதன் கொடுமையினைத் தாங்கவல்லமோ? தாங்கவல்லர் அல்லேம் என்பதைத் தலைவன் அறிவான்; ஆகவே அவன் நம்மைவிட்டுப்பிரியான் எனக் கூறும் தோழி கூற்று, மேலும் சுவை உடையதாம்.

“புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி, அயலது
தேம்பாய் மாமலர் நடுங்க, வெய்துயிர்த்து
ஓங்குமலைப் பைஞ்சுனை பருகும் நாடன்
நம்மைவிட்டு அமையுமோ மற்றோ; கைம்மிக
வடபுல வாடைக்கு அழிமழை

தென்புலம் படரும் தண்பனி நாளே,” (குறுந் : ௩க௭ )