பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



௫௩. கந்தக்கண்ணன்

இவர் கந்தன் என்பாரின் மகன்; கண்ணன் என்ற இயற்பெயர் உடையவர்; இவ்விரு பெயர்களும் இரு வேறு சமயக் கடவுளர்க்குரிய பெயர்களாதலே நோக்கின், புலவர் காலத்தே, சமயங்களுக்கிடையே நிலவிய ஒற்றுமை நன்கு புலனாம். இவர் பாடிய ஒரு பாட்டு, குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது. பால் புளிப்பினும், பகல் இருளினும், பருவம் மாறினும், தம் கணவர் சொல்மாறார் என்ற மாண்புடை உளத்தராவர் தமிழகமகளிர் என்ற கருத்தினே நன்கு எடுத்துக்காட்டியுள்ளார் புலவர்.

ஒரு தலைவன் மாரிக்காலத் தொடக்கத்தே மீள்வன் எனக்கூறிப் பொருள்தேடப் பிரிந்திருந்தான்; ஒருநாள், தலைவியின் தோழி மலர்ச்சோலேயுட் புக்கவள் ஆண்டுப் பித்திகம் என்ற மலர் நன்கு மலர்ந்திருப்பதைக் கண்டாள்; பித்திகம், மாரிக்காலத்தில் மலரும் இயல்புடையது; ஆகவே, கார் காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்; கூறிக் சென்ற காலம் வந்துவிட்டது; ஆனால் அவரோ வந்திலர்; அந்தோ தலைமகள், பித்திகம் மலர்ந்துவிட்டதைக் காணின் பெரிதும் வருந்துவளே என வாடினாள்; தோழியின் வாட்டத்தை உணர்ந்தாள் தலைவி; "தோழி! இப் பித்திகம் அறியாமை நிறைந்தது; பருவத்தே மலர்வதை விட்டுப் பருவமல்லாப் பருவத்தே மலர்ந்துளது; பருவம் வருதற்கு முன்னே மலர்ந்துள இதன்செயல் அறியாமை யுடைத்து என உணராமல் நீ வருந்துகின்றன; பித்திகத்தின் அறியாமைகண்டு மருள்வேன் யானல்லன்; ஆனால், பிரிந்து பொருள்தேடிச் சென்றுள நம் தலைவர், ஆண்டு, இப்பித்திகத்தைப் போன்றே, பருவம் வருதற்கு முன்னரே இடித்துப்பெய்யும் மழைக்குரல் கேட்டு, பருவம் வந்து விட்டது; பருவம் வரவும் யாம் செல்லாதுபோயின் தலைவி உயிர் நில்லாதுபோம்; ஆகவே எடுத்தவினை குறைவினை யாயினும் ஆகுக! இன்றே ஆண்டுச்செல்வன் என்று துணிந்த உள்ளமுடையராய் வந்துவிடுவரோ என்றே