பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௪. கந்தரத்தனார்

கந்தாத்தனார் என்ற பெயருடையார் பலராவர்; உரோடகத்துக் கந்தரத்தனார், காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் என்பாரை நோக்குக. கந்தரத்தனார் உலகியல் அறிந்த உயர் பெரும்புலவராவர்; கார்காலத் தொடக்கத்தே நில்லாது வருவன் எனக் கூறிச்சென்ற தலைவன் வாரானாகக், கார்காலம் வந்துற்றமை கண்டு வருந்திய தலைவி, அக்காலம் வந்துற்றது என அறிவித்து வந்து முழங்கும் மழையை விளித்து, 'சான்றோர், பிறர் நோயும் தந்நோய்டோல் போற்றிப் போக்கிப் பெரும்பணிபுரிவர்; வருவேன் என அவர் கூறிச் சென்ற காலத்தே வந்த நீ நின்னோடு அவரையும் உடனழைத்து வந்து என் துயர் போக்கித் துனைபுரிந்தாயல்லை, மாறாக, அவரை விடுத்து வந்துள்ளன; அம்மட்டோ! 'ஆங்கு அவர் உள்ள நிலையினைக் கூறுகிறேன் கேள்' என வேதனை தருவன வேண்டுவ கூறுகின்றனனை; நின் செயல், சான்றோர் செயலொடு பட்டதன்று ; நீ சான்றோன் அல்லை' என வெறுத்துக் கூறும் வெஞ் சொல்லும்,

"பருவம் செய்த கருவி மாமழை!
அவர்நிலை அறிமோ ஈங்கென வருதல்

சான்றோர்ப் புரைவதோ வன்றே
((நற் :௨௩௮)

"இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு' என்ற பொருள் நெறியுணர்ந்து, தமக்குக் கேடுசெய்தாரையும், அவர் தாம் செய்தது தவறு என உளமார உண்ர்ந்து திருந்துவாராக என விடுத்துப் பொறுப்பர் பெரியோர்; பெரியோர்தம் பண்பு இதுவாகவும் இவ்வூர் வாழ்பெண்டிர், தங்கட்கு ஒரு தீங்கும் செய்யாத நம்மை, ஒரு பிழையும் அறியாத நம்மை அலர் தூற்றித் திரிகின்றனரே! இவரை என்னென்பது' எனக் கூறுவதும் புலவர் கந்தரத்தனார் சான்றோர் சென்ற நெறியுணர்ந்த நல்லோராவர் என்பதை நிலைநாட்டுவதறிக.