பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அதியன் விண்ணத்தனார்

கொணர்ந்த சுறாமீன்களைத், தம் பக்கத்தே வாழும் தமர் முதலாயினார்க்குப் பகிர்ந்தளித்து வாழும் பண்புடைய வாழ்க்கையர்; “பழந்திமில கொன்ற புதுவலைப் பரதவர், மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி, மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி.” (அகம் : க௦) எனத் தொண்டித் துறையினையும், மாந்தை மாநகர், கடற்கரையைச் சார்ந்து உளது; “கடல் கெழு மாந்தை” (நற்: கு௩க) மாந்தை மகிழ்ச்சி தரும் இயற்கைக் காட்சிகளை உடையது: கடற்கரைக்கண் நிற்கும் நாவல் மரத்தினின்றும் கருநாவற் கனி கீழே வீழ்ந்ததாக, அதைத் தம்முடைய இனமெனக் கருதிய தும்பிகள் அதைச் சூழ்ந்து மொய்க்க, அதைக் கனியென உணர்ந்த நண்டு, தன் கவர்த்த கால்களால் பற்றிக்கொண்டதாக, அதைப் பெறமாட்டாது வருந்தும் தும்பிகள் அதைச் சுற்றிச் சுற்றித் திரிந்து அலமரும்; நண்டிற்கும், தும்பிக்கும் இடையே நிகழும் இப் போராட்டம். இரைதேடி ஆங்குவந்த நாரையைக் கண்டஞ்சிய நண்டு ஓடி ஒளியும், இத்தகைய அழகிய காட்சிகளை ஆங்காங்கே உடையது அம் மாந்தை ;

“பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி; பழம் செத்துப்
பல்கால் அலவன் கொண்டகோட் கூர்ந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரைதேர் நாரை எய்திய விடுக்கும்

துறைகெழு மாந்தை.”
(நற்: ௩ரு)

என மாந்தைத் துறையினையும், “துஞ்சா முழவின் கோவற்கோமான், நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்” (அகம் : ௩௫) என மலையமான் திருமுடிக் காரியையும், அவனுக்குரிய திருக்கோவலூரையும், தென் பெண்ணையாற்றையும், நெய்தல் வளம் நிறைந்த கொற்கைத் துறைக்கண், மகளிர் தம் பற்கள் போலும் அழகிய முத்துக்கள் அளவின்றிக் குவிந்து