பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

அதியன் விண்ணத்தனார்

 'ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந் நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று' என்ற நல்லுரையால் நலம்பல உண்டாதலோடு, ஒருசிறிது கேடும் உண்டாம்: இம் மான உணர்வு உண்மையால், மக்கள் பணிந்து போகவேண்டிய காலங்களிலும் பணியாமையினையே விரும்புவாராயினர்; அஞ்சவேண்டுவன கண்டும் அஞ்சாமை மேற்கொண்டு அறிவிழக்கலாயினர்; இதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார் புலவர். அரசர் இருவர் பகை கொண்டு போரிட்டனர்; போரில் இருவர் படையும் பெரும்பாழுற்றன; மேலும் போர் மேற்கொள்ளின் உள்ள படையும் உருக்குலையும், ஆகவே போர்விட்டுப், பணிந்து போதலே நன்று என்பதை இருவரும் உணர்ந்தனர்; ஆயினும் ஒருவரும் பணிந்தாரலர், பணியாமைக்குக் காரணம் அறிவின்மையன்று முன்னே பணிந்தது இப் படை, என்ற பழிச்சொல் தமக்கு உண்டாகி விடுமோ என்ற மானவுணர்வு இருவர் உள்ளத்தும் இடம் பெற்றதே காரணமாம் என்ற கருத்துரையால், அரசர்கள் கொள்ளும் மானவுணர்வால் மாண்ட பெரும்படைகளைக் காட்டி, மானவுணர்வு கொள்ளலாகா இடமும் உண்டு என்பதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார். 'மன்னவர், தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை, ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி, நின்ற நிகழ்ச்சி.'

பேராறுகளில் படிந்து ஆடும் பெருமக்கள், பொன்னால் செய்யப்பெற்ற நந்து, நண்டு, இறவு, வாளை இவற்றை அவ்வாற்று வெள்ளத்தில்விட்டு, 'வயல்கள் விளைக! பொன் மிகப் பெருகுக!' என வாழ்த்தி நிற்கும் வழக்குடையராவர் என்பதையும் கூறியுள்ளார். "நத்தொடு நள்ளி கடை இறவு, வயவாளை வித்தி அலேயில் விளைக; பொலிக என்பார்."

வையை யாற்று வெள்ளங் காண விரும்பிய மதுரை வாழ் மக்கள், களிறுகள் மீதும், பிடிகள் மீதும் ஊர்ந்து சென்றனர்; இடைவழியில் ஒரு களிறு, தன் பக்கத்தே வந்த பிடியொன்றைக் கண்டு காமம் கொண்டு, காம மயக்