பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அதியன் விண்ணத்தனார்

பெண்ணின் பெற்றோர் பெரிதும் உவக்குமாறு, பணி பல புரிந்தும், பணிந்து இன்றும் அவர் பெண்ணைப் பெற முயலும் அறநெறி நிற்கும் ஆண்மகனும் இருந்தான் என அறியத் துணைபுரிந்த அம்மூவனார்க்கு அறிவுடை உலகம் நன்றி தெரிவிக்குமாக!

கணவன், பரத்தை வீடு போதல்போலும் தகாவொழுக்கம் உடையனாயவழி, அவன் ஆண்மகன் ஆவன்; எதையும் செய்தல் கூடும்: அதைத் தடுத்துப் போக்கல் பெண்டிர்க்கு அழகன்று என அடங்கியிராது, தாய் தன் மகன் தவறு செய்தக்கால், கடுஞ்சொல் கூறியாவது திருத்தி நல்வழிப் படுத்தல்போல், தவறிய கணவரை இடித்துரைத்து நல்வழி நிறுத்தல், பெண்டிரின் நீங்காக் கடமையாம் எனவும், அவ்வாறு வழங்கும் அறவுரைகளுக்கு இடையே, அன்பற்றவனே, கொடியவனே என்பன போலும் கடுஞ்சொற்கள் சில வழங்குவது அறத்திற்கு அப்பாற்பட்டதன்று எனவும் கூறுவர் ஆசிரியர் தொல்காப்பியனார்; “தாய்போல் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப” “அன்பிலை; கொடியை; என்றலும் உரியள்” (தொல் - கற்பு: ௩௳, கஎ) என அவர் கூறும் விதிகளை நோக்குக. கணவன், பாடத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு விட்டான்; அதனால் உளம் வருந்திய அவன் மனைவி, ஒருநாள், தன் கணவனுக்கு நண்பனாகிய பாணனைக் கண்டாள்; அவனை அழைத்தாள்; “பாண! நண்பர், நன்நெறியிற் பிறழ்வுழி, நல்லுரை பல கூறி நல்வழி நிறுத்துதல் அன்றோ நண்பர்க்குப் பண்பு? நின் நண்பன், தகாத வொழுக்கினனாகவும், இடித்துரைத்து ஈண்டுக் கொணர்ந்தனையல்லை; ஆதலின், நீயும், நின் நண்பனே போல் பண்பற்றவன் போலும்” எனக் கூறித் தன் கடமையிற் றவறாப் பெண் ஒருத்தியைப் போற்றியுள்ளார் புலவர் அம்மூவனார்:

“பண்பிலை மன்ற; பாண! இவ்வூர்
அன்பில கடிய கழறி
மென்புலக் கொண்களைத் தாரா தோயே.” (ஐங் : க௩௨)