பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

45

“பொங்கிரு முந்நீர் அகமெல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால்!
எங்கேள் இதனகத்து உள்வழிக் காட்டீமோ
காட்டீயா யாயின், கதநாய் கொளுவுவேன்;
வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன்.” (நெய்தற்கலி: ௨௭)

“பழியொழித்துப் பகல் விளக்கும் ஞாயிறே ! உலகியல் உணராதாரைக் கழியச் சீறுவை என்று கூறகி. கேட்டுளேன்; நின்னைப் பணிந்து ஒன்று வேண்டுகின்றேன்; அவ்வாறு சீறுங்கால், அவரைக் கழியச் சினவற்க! என் உள்ளம் கெடுமாறு ஊர்விட்டுப்போன அவரைக் கழியச் சீறுவையாயின், அவர் அழிவர்; அவர் அழியின் என் உயிரும் அழியும்.”

“பழிதபு ஞாயிறே! பாடறியா தார்கண்
கழியங் கதழ்வை எனக்கேட்டு, நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன்; என்நெஞ்சம்
அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை

ஒழிய விடாதீமோ என்று.” (நெய்தற்கலி : ௨௬)

தலைவன், இவ்வாறு, தான் வருந்தப் பிரிந்து சென்ற வன்கணாளனாயினும், அவன் சென்ற ஆற்றின் கொடுமை, அளவிடற்கரிதாம் என்பதை அறிந்தக்கால், அவன்பால் அன்பும், இரக்கமும் அவை தம்மாலே தோன்றல் தலைவியர்க்கு இயல்பாம்; இவ்வுள்ளப் பண்பினை உணர்த்துகிறார் புலவர் ஒரு பாட்டில்.

“பிரிந்து சென்றவன், முன்னர் என்னைப் பணிந்து பெற்ற இன்பத்தை மறந்துவிட்ட மாண்பிலானாயினும், அவன் சென்ற சுரம் அழல்விடும் கொடுமை உடைத்து என்ப! அக் கொடுமையைக் கண்டும், கொன்னே இருக்கும். ஏ! வானமே என்ன காரியம் செய்துவிட்டனை; உடனே, ஆங்கு ஓடு; ஒடி உன்பால் உள்ள மழைத்துளிகளை எல்லாம் மாறாது சொரிந்து ஆண்டுள்ள வெப்பத்தை அகற்றுவாயாக! நின்பால் உள்ளன எல்லாம் நீர் அற்ற