பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௩. இடையன் நெடுங்கீரனார்

நெடுங்கீரனார் என்ற இயற்பெயருடைய இவரும், முல்லை நிலத்து ஆயர்குடிவந்தவரே; இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்திருப்பது அகநானூற்றில் வந்துள்ள செய்யுள் ஒன்றே; இவர் கள்ளும், நெல்லும் நிறைந்த வேளூரையும், அவ்வூருறை பலிபெறு தெய்வத்தையும் தம் பாட்டில் எடுத்தோதிப் பாராட்டியுள்ளார். தெய்வம் உறையும் இல்லில் நறுவிரை தெளித்தலும், மணங்கமழ் மலர் தூவலும் உண்டு எனவும், தெய்வம் நோக்கித் தூவிய மலர்களில் வண்டுகள் தேன்குடியா எனவும் கூறுவர்; அத்தெய்வம், தவறு செய்தாரைத் துயர் உறுத்தும் என்றும் கூறியுள்ளார்; பரத்தையர் ஒழுக்கம் உண்டு எனச் சினந்த தன் மனைவி முன் நின்று, “ நீ கூறிய அவளோடு புணையேறிச் சென்று புனலாடி வந்தேனாயின், தெய்வம் என்னை வருத்துமாக” என்று சூளுற்ற தலைமகனை நமக்கு அறிமுகமாக்கியுள்ளார் அப்பாட்டில், பண்டைக் காலத்தில், ஊர்மன்றிடை நிற்கும் மரத்தடிகளில் கள் விற்பார் கடைவைத்திருப்பர்; அவர் பலநாள் அரித்தெடுத்த கள்ளைச் சாடியில் வைத்து விற்பர்; ஒரோவழி, கள்முகக்கும் கலம்பட்டுச் சாடி உடைந்து கள் வீணாதலும் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.


“நன்மரங் குழீஇய நனைமுதிர் சாடி
பன்னாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்
நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப்
பொறிவரி இன வண்டு ஊதல் கழியும்
உயர் பலி பெறூஉம் உருகெழு தெய்வம்
புனையீருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையே னாயின் அணங்குக என் என

மனையோள் தேற்றும் மகிழ்நன்”  (அகம் : ௧௬௬)