பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௪ இம்மென் கீரனூர்

கீரனார் என்ற இயற்பெயருடைய இவர், துன்புற்று அழுவார் கண்கள் விரைந்து நீர் சொரிதலை இம்மென்று சொரியும் எனக் கூறிய சிறப்பால். இம்மென் கீரனார் என அழைக்கப்பெற்றுளார். “நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று, அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க.” இவர் பாடிய பாட்டு ஈண்டுக்குறித்த நெடுந்தொகைப் பாட்டொன்றே.

தலைவன் விரைவில் வந்து வரையானாக வருந்திய தலைமகள், அவன் மலையினின்றும், ஆங்குள்ள மலர்களை அடித்துக்கொண்டு ஓடிவரும் ஆற்றைக் கண்டு, “கரையை அழித்து ஓடிவரும் ஆறே! யான் இவ்வாறு வருந்தவும், விரைந்து வரைந்து கொள்ளாது, அறனல்லாதன மேற்கொண்டொழுகுவதோடு, என் வருத்தம் கண்டு வருந்துவதும் செய்யாதநின் தலைவன் செயலை என்னென்பது என நின்னை யான் கேட்பேன் என அஞ்சி, அவன்மலை மலர்களால், நின் உடலை மூடிக்கொண்டு, நாணத்தால் நடுங்கி மறைந்து மறைந்து நடக்கின்றனை போலும்” எனக் கூறி வருந்தினாள் எனப் பாடிய புலமையின் பெருமையினைப் போற்றுவோமாக!

“பசலை மேனி நோக்கி நுதல்பசந்து
இன்னே மாகிய எம்மிவன் அருளான்
நம்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க,
நன்று புறமாறி அகறல் யாழ்நின்
குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ?
கரைபொரு நீத்தம்! உரைஎனக் கழறி
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர்மலைப்
பன்மலர் போர்த்து நாணுமிக ஒடுங்கி

மறைந்தனை கழியும் நிற்றந்து.” (அகம் : ௩௧௨

)