பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௮. இளங்கீரனார்

இளங்கீரன் என்ற இயற்பெயருடைய புலவர் பலராவர்; அந்தி இளங்கீரனார், எயினந்தை மகனார் இளங்கீரனார், பொருந்தில் இளங்கீரனார் என்பாரை நோக்குக. இளங்கீரனார், எயினந்தை மகனார் இளங்கீரனார், பொருந்தில் இளங்கீரனார் ஆய மூவரும் ஒருவரே என்று கொள்வாரும் உளர்; இவர் மூவரும் வேறு வேறாவர் என்பதை விளக்கவே, ஒருவரை இளங்கீரனார் என்றும், ஒருவரை எயினந்தை மகனார் இளங்கீரனார் என அவர் தந்தை பெயரோடு இணைத்தும், ஒருவரைப் பொருந்தில் இளங்கீரனார் என அவர் பிறந்த ஊர்ப்பெயரோடு கட்டியும் வழங்கினராகவும், மூவரையும் ஒருவரே எனக் கோடல் பொருந்தாது. இளங்கீரனார் பாடிய பாக்கள் நான்கு; நற்றிணையில் மூன்று குறுந்தொகையில் ஒன்று.

தன்னால் விரும்பப்பட்டாளாய் தலைமகளைத் தலைமகன் புகழ்ந்து உரைத்தற்கு எத்தனையோ உவமைகளை ஆண்டுள்ளனர் புலவர்; அவர்கள் காட்டிய அத்தனை உவமைகளினும் சாலச்சிறந்த ஓர் உவமையினைப் புலவர் இளங்கீரனார் எடுத்தாண்டுள்ளார். ஒருவன் ஒருவினையைத் தொடங்கி இனிது முட்டத்து வெற்றி காணல் மிகமிக அரிய செயலாம்; நல்ல காரியத்திற்கு நானூறு இடையூறு என்ப; “மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்; கருமமே கண்ணாயினார்” என்ற பாட்டால் ஒரு வினையை முடித்து வெற்றி காணல் எத்துணை அருமையுடைத்து என்பது புலனாம்; “ஒன்றை நினைக்கின் அது வொழிந்திட்டு ஒன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்; ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் இது உலகியல்; இதனால், எண்ணிய எண்ணியாங்கு எய்தப் பெறல் எத்துணைத் திண்ணிது என்பதும் புலனாம்; இவ்வாறாகவும், ஒருவர் ஒரு வினையைப் பலகாலும் எண்ணி எண்ணிப் பார்த்து, இறுதியில் தொடங்கி, இடையில் உண்டாம் இடையூறுகளை