பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அதியன் விண்ணத்தனார்

௪௫) என இயற்கையோடியைந்த விதி கூறினார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். வினைமுடித்து வெற்றி கண்ட ஓர் ஆண்மகன் உள்ளத்தை உள்ளவாறு உணர்ந்தமையாலன்றோ, அவ்வினை முடித்துப்பெற்ற பேரின்பமும், அவன் மனைவிமாட்டுக் காட்டும் போன்பும் ஒருங்கே தோன்ற, அவன் “வினை முடித் தன்ன இனியோள்” எனக் கூறிப் பாராட்டினான் தன் மனைவியை எனப் பாடிப் புகழ் பெற்றார்! (நற்: ௩).

புலவர், பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்ற சேரவேந்தன், பகைவரைக் கொன்று வெற்றி காணும், போர்க்களத்தே, போர்க்களம் பாடும் பொருநரோடு போந்த பாணர்கள், ஆம்பற் பண்எழக் குழலூதிப் பாராட்டுவதையும், “உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பலம் குழல்” (நற்: ௧௧௨), சோழர்க்கு உரிய உறந்தை நகரையும், அதன் கண் உள்ள நீர்த்துறையினையும் “வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை, நுண்மணல் அறல்” (குறுந் : ௧௧௬), கல்லாத இளஞ்சிறுவர் பல்லோர் ஒன்றுகூடி, நெல்லிக்காயாகிய வட்டினைக்கொண்டு, வேப்பமரத்தின் நிழல் நிறை அடியில், பொன்னுரை போலும் வட்டமான அரங்கிழைத்து வட்டாடி மகிழும் வளமற்ற நிலையினையும், “பொரியரை வேம்பின் புள்ளி நீழல், கட்டளை யன்ன வட்டரங்கிழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்” (நற்: ௩) தம் பாக்களில் எடுத்துக் கூறிப் பாடியுள்ளார்.