பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௨. இளம்போதியார்

போதியார் என்ற பெயர் உடைமையால், இவர் புத்த சமயத்தைச் சார்ந்தவர் என்பது புலனாம். புத்தரும், சமணரும் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டு மிக மிகப் பெரிதாம்; புத்தர்கள், எப்போதும் பொருள் நிறைந்த அறிவுரை பல அளிக்கும் இயல்பினராவர் என்பதற்கேற்ப, இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்த நற்றிணைப் பாட்டு ஒன்றிலேயே பல அரிய கருத்துரைகளை வழங்கியுள்ளார்.

ஓர் ஆண்மகன், உருவானும், திருவானும் உயர்ந்தாளொருத்தியைக் காதலித்தான்; காதல் மிகுதியால் அவளே இடைவிடாது சுற்றித் திரிந்தான்; அந்நிலையில், அவள் தாய் அறிந்தால் ஏதம் உண்டாம் என அஞ்சினானும் அல்லன், இவ் வொழுக்கம் சில நாள் சென்றது; பின்னர் அவன் அவள்பால் வருவது குறைந்தது; தொடக்கத்தில் தாய்க்கும் அஞ்சா அவன், இப்போதெல்லாம், அவளோடு ஆடும், ஆயத்தாரைக் காணவும் அஞ்சி அகறலாயினான்: அவன்பால் கண்ட இவ்வியல்பினே உணர்ந்தாள் அப்பெண்ணின் உயிர்த் தோழி; இதனால், அவனுக்கு, அவள்பால் உண்டான அன்பு குறைந்துவிட்டது போலும் எனக் கொண்டாள்; இதை அப்பெண் அறியின் வருந்துவளே என்ற எண்ணத்தால் சில நாள்வரை அவளுக்கு அறிவிக்காமலே மறைத்து வந்தாள்; நிலைமை மேலும் கெடும்போல் தோன்றிற்று; இனியும் அவட்கு மறைத்தல் அறிவுடைமை ஆகாது அவளிடம் கூறி, அவளோடு உசாவி, இதற்கொரு வழிசெய்தல் வேண்டும் எனத் துணிந்தாள்; உடனே அவளிடம் ஒன்று விடாமல் உரைத்தாள்; உரைத்துவிட்டு, "ஓருயிரும் ஈருடலும் போலும் குற்றமற்ற நட்புடைய நினக்கு இதை, இத்துணைகாறும் உரையாது இருந்தமை என் உள்ளத்தை மிகவும் வருத்துகிறது; அதனினும், பெருங்குணம் உடையவர்; பேரன்புடையவர் என்றெல்லாம் கருதிய நம் தலைவன், பேணிக்-