பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அதியன் விண்ணத்தனார்

யாக “நின்வழிபடு கடவுளாம் காளத்திநாதன் பாகத்தமர் ஞானப்பூங்கோதையார் கூந்தலும் அன்னதோ?” என் நக்கீரர், அஞ்சாது “ஆம்” என்றார். உடனே சிவனார் சினந்தார்; நெற்றிக்கண் திறந்தார்; துதல் விழியின் வெம்மை யாற்றாது நக்கீரர், பொற்றாமரைக் குளத்தே வீழ்ந்தார். பின்னர்ப் புலவர்கள் வேண்ட இறைவன் அருள் உளம் கொண்டு கைகொடுத்து நக்கீரரைக் கரைசேர்த்தார். இது, அப்பாடல் பற்றிய கதை.

“எல்லாம் வல்ல இறைவன் யாம்; யாம் எது வேண்டுமாயினும் செய்யவல்லேம்; எப்படி வேண்டுமாயினும் பாடலாம்” என்ற எண்ணங்கோடல் இயலாது: தமிழில் பாட்டொன்று புனைய அவன் விரும்புவனாயின், அவன், அத் தமிழிலக்கண நெறிநின்றே பாடுதல் வேண்டும்; அவன் பாடிய பாட்டு அவ்விலக்கணத்தின் வேறுபடின், அவன் இறைவன்; ஆகவே அவன்பாட்டு எப்படி யிருப்பினும் ஏற்றுக்கொள்க எனக் கூறார் தமிழ் அறிந்தார்; பிழையுடைய பாட்டு, இறைவனுடையதேயாயினும், அப்பாட்டுக் “குற்றம் குற்றமே” எனக் கூசாது கூறும் அத்துணைச் சிறப்புடைத்து நம் தமிழ்மொழி! வாழ்க அதன் வளம்! வாழ்க அதன் வரம்பாம் இலக்கணப் பெருவழி!