பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬. ஈழத்துப்பூதன் தேவனார்

ஈழம், மிகப்பழைய காலத்திருந்தே தமிழ்நாட்டின் ஒரு பகுதி போன்ற ஒற்றுமை கொண்டிருந்தமையால், தமிழகத்தார் ஈழம் சென்று குடி புகுதலும், ஈழத்தார் ஈண்டு வந்து வாழ்தலும் அக்காலத்திலிருந்தே நிகழ்ந்து வந்தன; அவ்வாறு ஈழத்தினின்றும் மதுரையிற் குடி புகுந்தாருள் பூதன் என்பாரும் ஒருவர். அவருடைய மகன் தேவனார். ஏடெழுதுவோர் பிழையால், இவர் பெயர் ஏறத்துப்பூதன் தேவனார் எனவும் வழங்கப்பெறும்.

மதுரையில் வாழ்ந்த இவர், அம்மதுரையைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட பாண்டியன் ஒருவனைப் பாராட்டுகிறார்; அவனைப் பாராட்டியதோடு அவன் தலைநகரையும் பாராட்டுகிறார்; தன்மேல் பகைத்து வந்த பகைவரை வென்றவன்; அவ்வாறு வென்றமையால் பெற்ற அழியாப் புகழ் உடையவன்; வெண்கொற்றக் கொடையுடையவன்; பசும்பூண் பாண்டியன் என்னும் பெயர் உடையவன்; பாண்டியனுக்கு உரிமைடையது மதுரை; புலவர் பாடும் பெருமையும் சிறப்பும் உடையது, கூடல் எனவும் பெயர் பெறும் அம்மதுரை. இது அவர் கூறும் புகழுரைகள்:

“பொருவர்
செல்சமம் கடந்த செல்லா நல்லிசை
விசும்பிவர் வெண்குடைப் பசும்பூண் பாடியன்
பாடுபெறு சிறப்பின் கூடல்.” (அகம்: ௨௩க)

ஓர் ஊரிற்கோ, அல்லது ஒரு நாட்டிற்கோ தலைமை மேற்கொள்வார், அவ்வூருக்கும், அந்நாட்டிற்கும் கேடு சூழும் பகைவரைப் பாழாக்கவும், தம் ஊரிற்கும், தம் நாட்டிற்கும் உறவுடையராய் வாழும் அடுத்த ஊரார்க்கும், அண்டை நாட்டார்க்கும் பகைவரால் உண்டாம் துயரினைப் போக்கித் துணைபுரியவும் சிறிதும் தயங்குதல் கூடாது; இப்பண்பு தலைவராவார்களிடத்தே நின்று நிலைபெறுதல் வேண்டும்; அப்பண்பு அவர்பால் இன்றேல், அவர் தலைவ-