பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அதியன் விண்ணத்தனார்

பெருமை வாய்ந்தது; இன்று, நாகரிகத்தில் நனிசிறந்து விளங்கும் நாடுகள் மக்களால் அறியப்படாத அந்தக் காலத்திலேயே, இலக்கிய வளத்தால் வனப்புற்ற வாழ்க்கையுடையவர் தமிழர் என்ற உண்மையினை உலகறியத் துணை புரிவன, அவர் ஆக்கி அளித்த இலக்கியப் பெருஞ் செல்வங்களே; இத்தகு இலக்கியங்களை உலக மக்கள் உணரும் வகை வெளியிடும் பணியினை விரைந்து மேற்கோடல் வேண்டுமாயினும், தமிழ் இலக்கியமாம் அவற்றை அறிந்து உணராத தமிழரும் பலர் உளர் ஆதலின், அவர் அறிதற்பொருட்டு, அவற்றை வெளியிடும் பணியும் இன்றியமையாது வேண்டப்படுவதே.

தமிழ் நூல்களை ஆக்கித்தந்த புலவர்களைச் சங்ககாலப் புலவர், பிற்காலப் புலவர் என வகைப்படுத்துவர் தமிழக வரலாற்று நூலார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்த தமிழ்ப்பணி ஆற்றிய புலவர்கள் சங்ககாலப் புலவர் எனப்படுவர்; அவர் இயற்றிய, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகிய பெருநூல்களை அறிதற்கு முன்னர், அவ்ரை அறிதல் முறையாம் என்ற எண்ணத்தால், அவர் தம் வரலாற்றினை உரைக்கத்தொடங்கி, கபிலர், பாணர், நக்கீரர், அவ்வையார், பெண்பாற் புலவர்கள், உவமையாற் பெயர் பெற்றோர், காவல பாவலர், கிழார்ப்பெயர் பெற்றோர், வணிகரிற் புலவர்கள், மாநகர்ப்புலவர்கள், உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர், என்ற தலைப்புக்களின்கீழ்ப் பல்வேறு புலவர்களின் வரலாறுகள் விளங்க உரைக்கப்பட்டுள்ளன; மேற்கூறிய எத் தலைப்பின் கீழும் வரிசைசெய்ய இயலாதாராகிய புலவர்களை, அகரவரிசைப்படுத்தி, அதியன் விண்ணத்தனார் முதல், கீரந்தையார் ஈறாக உள்ள அறுபத்தாறு புலவர்களின் வரலாறு உரைக்கும் இந் நூற்கு, இந் நூலின்கண் வரும் புலவருள் முதற்கண் நிற்பார் பெயரே, நூற்பெயராக அமைந்துளது.