பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உஎ. உருத்திரனார்

சங்ககாலத் தமிழ்மக்கள், மேற்கொண்டு போற்றிய தெய்வப் பெயர்களுள் உருத்திரன் என்பதும் ஒன்று; கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் தந்தை பெயரும் இப் பெயரேயாதல் உணர்க. உருத்திரனார் பாடிய பாட்டொன்று, குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது. பாலைநிலத்துக் கொடுமையினையும், அந்நிலத்து வழிச்செல்லும் தலைவனின் பண்பட்ட உள்ளத்தினையும் புலவர் நன்கு பாடியுள்ளார்.

வில்லும் விடுகணையும் கையிற்கொண்டு, உயர்ந்த இடம் தேடி இருந்து, அவ்வழியே பொன்னும் பொருளும் கொண்டு வருவாரை எதிர்நோக்கி நிற்கும் ஆறலைகள்வர், தாம் உற்ற நீர்வேட்கையினைத் தணிக்கும் தண்ணீரைப் பெறமாட்டாமையான், மரப்பட்டைகளை மென்று தம்நீர் வேட்கையினைப் போக்கிக்கொள்ளும் கொடுமையுடைய பாலைநிலமும், தம் மனைவியரின் மாண்பினை மனதில் எண்ணி, எண்ணி மகிழ்ந்து செல்வார்க்கு இனிமையுடையதாகத் தோன்றும் என்று கூறினான் ஒரு தலைமகன் எனப் பாடியுள்ள அவர் பாட்டினைப் படித்து இன்புறுக :

“விடுகணை வில்லொடு பற்றிக், கோடுஇவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையின் நார்மென்று தணியும்
இன்னாக் கானமும் இனிய.” (குறும் : ௨௭௪ )