பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தோற்றுவாய் 5,

விட்டுச்சென்ற சில பாடல்களும், அப் புலவர்களுக்கு, மிக மிகப் பிற்பட்ட காலத்தே வாழ்ந்த யாரோ சிலர், அவர் பற்றி, எழுதிவைத்த சில வரலாற்றுப் பாடல்களுமே ஆம். புலவர்கள் எழுதிவைத்த பாடல்கள் முழுதும் அவர்தம் வாழ்க்கை வரலாற்றை அறிவிக்கும் இயல்பினவா எனின், அதுவும் இல்லை; அவர் பாடிய பாடல்கள் எல்லாம் இருவகையுள் அடங்கும். அகத்துறைப்பாடல்கள், புறத்துறைப்பாடல்கள் என. முன்னவை முழுதும் யாருடைய வரலாற்றையும் சிறப்பாகக் குறிப்பதின்றிப் பொதுவாக, அக்கால ஆண், பெண் கூடிவாழும் வாழ்க்கைவகையினை வகுத்துரைப்பனவாம்; ஆதலின் அவை புலவர்வாழ்க்கையை வகுத்துரைக்கத் துணைபுரிவன அல்ல; புறத்துறை தழுவிய பாடல்களே. புலவர் தம் வாழ்க்கையினைக் காண்பதில் ஒர் அளவு நமக்குத் துணைபுரியும் இயல்பின என்றாலும், அவைதாமும், புலவர் வாழ்க்கை ஒன்றையே விளங்க உரைக்க வந்தன அல்ல: அக்காலப் பேரரசர்களையும் சிற்றரசர்களையும் கண்டு, அவர் அளித்த பரிசில் பெற்ற மகிழ்ச்சியால், அவரைப் பாராட்டியும், அவரிடையே குறைகண்ட விடத்துக் கடிந்து கூறித் திருத்தியும் பாடிய பாடல்களேயாம். ஆகவே, அவை, அப் புலவர்தம் வாழ்க்கை வரலாற்றை விளக்குவதினும், அவ்வரசர் தம் வரலாற்றையே பெரிதும் விளக்கிச்செல்லும் இயல்பினவாய்த் தோன்றுகின்றன. என்றாலும், அரசர் பற்றிக் கூறும்பொழுது, அவ்வரசரோடு அப் புலவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் சிலவற்றையும் குறிக்கின்றன. ஆதலின், அப் புலவர் வரலாற்றை அறிவதில், அவை நமக்கு ஒரளவு துணைசெய்கின்றன என்பது உண்மையே எனினும் அவை, அவர் வரலாறு அனைத்தையும் அறிவிக்கும் ஆற்றல் உடையன ஆகா.

இனி, புலவர் தம் வரலாறு பல தலைமுறைவரை ஒருவர் கூற, மற்றவர் கேட்பது என்ற முறையிலேயே அறியப் ட்டு வந்ததாதலின், அம்முறையால், அவர் தம் உண்மை வரலாற்றுள் உள்ள பகுதி விடப்பட்டும், இல்லாத பகுதி இணையப்பெற்றும், ஒன்று பிறிதொன்றாகத் திரிக்கப்பெற்