பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 ஒளவையார்

றும், ஒருவர் வரலாறு மற்றொருவருடையதாக மாற்றப்பட்டும் இருத்தல் இயல்பே; ஆதலின், காதுவழிச்செய்தி (Hearsay evidence) யாய இச் சான்றுகளைப் புலவர் தம் வரலாற்றை அறிவிக்கும் உண்மைச் சான்றுகளாகக் கொள்வது கூடாது. ஆகவே, புலவர் வரலாறு என்பது, புராணங்களும், பிற்கால நூல்களும் கூறுவனவே என்று கொள்ளாது, அப்புலவர்கள் தம் வாய்ப்படப் பாடிய பாடல்களில் காணப்படும் ஒருசில குறிப்புக்களைக் கொண்டதென்றே கொள்ளுதல் வேண்டும். அதுவே, அவர் தம் உண்மை வரலாற்றை உள்ளவாறு உணரும் வழியாம். ஆதலின் அம் முறையைப் பின்பற்றிப் புலவர் பாடல்களாகப் பத்துப்பாட்டினும், எட்டுத்தொகையினும் கிடைக்கும் பாடல்களின் துணைகொண்டே புலவர்கள் வரலாறு வகுத்துரைக்கப்படும்.

பாடல்புனையும் பண்புடைக் கல்வியாளராய்ப் பெண்கள் பலர் வாழ்ந்த நன்னாடு என்ற பெருமையை உடையது நம் தமிழகம். தாய்காட்டைக் காத்தலே தம்மக்களின் தலையாய கடன்: அக்கடமையில் தவறும் தறுகணிலாரைப் பெற்றேம் எனக் கூறலும் பெரும்பழியாம் என்ற உணர்ச்சியின் ஊற்றுக்களாக மகளிர் பலர் மகிழ்ந்து வாழ்ந்த நாடு என்ற பெருமை உடையது நம் தமிழகம். பெண் கல்வியிற்சிறந்து பெருமிதங்கொண்ட நாடு: மறக்குல மகளிர் மல்கிய நாடு; என்ற இப்பாராட்டுரைகளைப் பண்டு பெற்றிருந்தது நம் தமிழகம். 'தமிழகத்தைப் பார்; அந்நாட்டு மகளிரைப் பார்; ஆவர்தம் அறிவின் ஆழத்தைப் பார்; ஆடவரிற் சிறந்த அவர்தம் ஆண்மையின் ஆற்றலைப் பார் அவர்கள் ஒழுக்கத்தின் உயர்வைப் பார்; உயர்ந்த பண்பாட்டைப் பார்,” எனப் பிறநாட்டு மக்கள் எல்லாம், தங்கள் நாட்டுப் பெண்மக்களுக்கு எடுத்துக்காட்டி ஏற்றம்பெற முயன்றனர். அன்று நாம் பெற்றிருந்த உயர்நிலை இது! அந்தோ! இன்று நம் நிலை என்ன? துருக்கியைப் பார்; முகமூடி அணிந்த அந்நாட்டு மகளிர்தம் இன்றைய முன்னேற்றத்தைப் பார்; ஆயுதம் ஏந்துகின்றனர் ஆடவர்களேப்போல், ரஷ்யாவைப்