பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தோற்றுவாய் 7.

பார்; சீனாவைப் பார்; அந்நாட்டுப் பெண்கள் உழைப்பால் அந்நாடுகளின் வனப்பும், வளமும் பெருகியுள்ளன. அவர்கள் ஆற்றலால் வாழ்வும் வெற்றியும் வளர்ந்துள்ளன." எனப் பிறநாட்டுப் பெண்களின் வாழ்வையும் வனப்பையும் இன்றையத் தமிழகப் பெண்களின் நிலைக்கு நம் நாட்டுப் பெண்களுக்கு எடுத்துக்கூறி வழிகாட்ட வேண்டியதாகி விட்டது. என்னே அவர்தம் வீழ்ச்சி!

என்றாலும், நம்பிக்கை முற்றும் அற்றுப்போய் விடவில்லை; மீண்டும் இங்கே இருள் நீங்கி ஒளிவீசும் நிலை தோன்றியுளது. "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேன்’ என்ற இடைக்கால இழிநிலையின் நீங்கி, 'பெண் கல்வி தேவைதானா?” என்ற ஐயநிலை உற்று, 'பெண்களும் கற்றற்குரியரே கல்வி அவர்களுக்கும் தேவைதான், எனத் தெளிந்து, 'அவ்வாறாயின், அவர்களுக்கு எத்தகைய கல்வி அளித்தல் வேண்டும்" என்ற ஆராய்ச்சி நிலைக்கு வந்துள்ளனர் இன்றையத் தமிழ்நாட்டார்; நாட்டின் நற்காலத்திற்கு இது ஒரு நல்ல அறிகுறி.

பிறநாட்டுப் பெண்கள், பாரோர் போற்ற வாழ்வதைப் போன்றே, பேரும் புகழும் பெருக வாழ்ந்த பெண்கள் நம் தமிழகத்திலும் இருந்தனர்; பிறநாட்டுப் பெண்கள் காட்டும் வழியைக் கடைப்பிடித்து உயர்நிலை பெற முயல்வதேபோல், நம் நாட்டுப் பெண்கள் நமக்குக் காட்டிய நல்வழியிற் செல்லவும் முன் வாருங்கள் என்று கூறும் நற்பணியை நினைவிற் கொண்டே, நம்காட்டில் பண்டு வாழ்ந்த பெண்கள் பலர் வரலாற்றை விரித்துரைக்கப் பெரியோர் பலர் விரும்புகின்றனர். அப் பெண்கள் வரிசையில் முதற்கண் நிற்கும் மூதறிவாட்டி ஒளவையாராவர்; அவர்தம் வாழ்க்கை வரலாற்றை அறிந்த அளவில் அறிவிப்பதே இந்நூல்.