பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 ஒளவையார்


நக்கீரர் சோழநாட்டுப் பிடவூர் கிழான் பெருஞ் சாத்தன் என்பானைப் பாடிய பாடலுள், "அரிக்குரல் தடாரியோடு ஆங்கு நின்ற எற்கண்டு” எனப் பாடியுள்ளார். ஆகவே, அவ்வாறு பாடுதல் கவிமரபே அன்றி உண்மையாகவே அவ்வாறு பாடினாரல்லர் என்பது உணரப்படும்.

மேலும் அரசன் ஒருவனைப் பாடும்பொழுது தங்களை யாரோ சில பாணர் பரிசில் பெறும் இடம் யாண்டுளது எனக் கேட்பது போலவும், அதற்கு விடையாகப் பரிசில் அளிப்போன், அவன் ஆற்றல், அருள் அவன்பால் தான் பெற்ற பரிசில், அவனிடைச் செல்லும் வழி ஆகியவற்றை அவர்க்கு அறிவிப்பார் போலவும், கவி பாடுதலை மரபாகக் கொண்டனர் புலவர். அவ்வாறு வந்த பாடல்களில் விளிக்கப்படும் விறலியரோ, அல்லது அப்பாட்டைப் பாடியவராகக் கூறப்படும் விறலியரோ, உண்மையில் விறலியராகார். கவிமரபு கருதிய புலவர்கள் தங்களேத் தாங்களே அவ்வாறு அழைத்துக்கொண்டனர் என்றே கொள்ளுதல் வேண்டும். இதற்கான சான்றுகள் சங்கப் பாடல்களில் நிறைய உள்ளன. பத்துப்பாட்டில் வரும் பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை முதலாய பாடல்கள் இவ்வாறு வந்த பாடல்களே. விறலி ஒருத்தியை விளித்துக் கூறியதாக ஒளவையாரே பாடிய பாட்டும் உண்டு.

             "ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
              தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக் 
              கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச் 
              சுரன் முதல் இருந்த சில்வளை விறலி
              செல்வை யாயின் சேணோன் அல்லன்". (புறம்:கo௩)

என்ற பாடல், அவ்வாறு வந்த ஒளவையார் பாடல்களுள் ஒன்று. ஆகவே, ஒளவையார் பிறந்த குடி பாணர்குடியே: அவர் பாணர் மகளே எனக் கொள்வது உண்மையன்று. பெரும்பாலான புலவர்களைப் பற்றிக் கூறுவதைப்போன்றே:


1. தடாரி - ஒருவகைப் பறை,