பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒளவையார் வரலாறு 11.


அவர் வாலாறு அறியமுடியாதவாறு இருள் சூழ்ந்துளது" என்றே கூறுதல் வேண்டும்.

     "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
      மெய்ப்பொருள் காண்பது அறிவு' (திருக்குறள், ௪௩௨) 

என்பதற்கு மாறாக, ஆளைக் கண்டே அவர் கருத்திற்கு மதிப்புத் தரும் மாண்பு கெட்ட மக்கள் வாழ்கின்ற இவ்வுலகில், ஒளவையார் வரலாறு விளங்காது மறைந்ததும் ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரியதே. உண்மையில் அவர் ஒர் இழிகுலப் பெண்ணுய்ப் பிறந்து, மணங்கொண்டு வாழா மங்கையாகவோ, அன்று மனங்கொண்ட மறு ஆண்டிலேயே கைம்பெண் ஆன களங்கமுடையளாகவோ ஆகிக், கணவன் இழந்த பின்னர்க் கட்டுக்கடங்காமல் காவல் மீறிக் காவதம் பல கடந்து காவலர் பலர் முன் நின்று, கவிபாடிப் பிழைப்பவளாய் மாறியதாக, அவர் தம் அவ் வரலாற்றை அறியும் வாய்ப்பும் இக்கால மக்களுக்குக் கிடைத்திருப்பின், அவர் தம் வாழ்வு வனப்புடையதன்று; ஆகவோ வனப்பிலா வாழ்வுடையாள் வாயினின்றும் வந்த அப் பாடல்களும் வாழ்த்துதற்குரியன அல்ல; வைதற்குரியனவே என்று கொண்டு, ஒரு வேளை வெறுத்திருப்பினும் இருப்பர். அத்தகைய ஒரு நிலை ஏற்படாமல் இருக்க, ஒளவையார்தம் வரலாறு விளங்காமற் போனது நன்று என்றே இக்காலப் பெரியோர் சிலர் எண்ணுவர். அதனாலன்றோ அவ்வியல்புடையாரும், ஒளவையார் பாடலைக் குறையுடையதெனக் கொண்டு தள்ளாது, குணம் உடையதாகக் கொண்டு போற்றவும் செய்கின்றனர்.

(2) சார்ந்த சமயம்:

         "கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
          வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் 
          கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” 
                                           (தொல் : புறத்திணை ௩௩) 

என்ற தமிழர் இயற்கை வழிபாட்டுமுறை மறைய, சிவன், திருமால், முருகன் போன்ற வைதீகக் கடவுளரை