பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு 15

வும் வரும் பாடல் ஒன்றில், அவ்வரசன், அணிகள் பல அணிந்ததனால் தோன்றிய ஒளவையார் தம் செயற்கை அழகு, இளமைநலம் குன்கு அவர் உடலின் இயற்கை அழகு, நற்குடிப் பெண்டிர்பால் பிரியாது நிற்கவேண்டிய நிறைகுணங்களாகிய மடம் முதலாயின, மை தீட்டப்பெற்ற அவர் கண்கள், பேரொளிவீசும் நெற்றி ஆகியவற்றைக் கண்டு பாராட்டியதாக அவரே கூறியுள்ளார்.

    1. "இழையணிப்பொலிந்த ஏக்து கோட்டல்குல்
        மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!" 
                                                (புறம்: அ௧) 

ஆகவே, ஒளவையார் பேரழகுவாய்ந்த சீரிளமைப்பருவத்தராய் இருந்த நாள் முதலே பாடல் தொழிலில் பயிற்சியுடையராய் இருந்தனர் என்பது தெளிவாம்.

(4) அவர் வாழ்க்கைநிலை:

            "இருவேறு உலகத் தியற்கை திருவேறு.
             தெள்ளிய ராதலும் வேறு' (திருக்குறள், ௩௭௪)

என்பர் திருவள்ளுவர். கல்வி பல கற்றவர் கடும் வறியராகவும், செல்வத்தில் செழித்திருப்போர் எழுத்தறிவு தானும் இலராகவும் இருப்பதையே நாம் எங்கும் காண்கின்றோம். கல்வியும் செல்வமும் பொருந்த வாழ்வார், மிகச் சிலரே; பெருஞ்செல்வம் உடையார்பால் வேண்டுமாயின், சிறிதளவு கல்வியிருக்கக் காணலாமே அன்றிப் பெருங்கல்வி உடையார்பால் சிறிதளவு செல்வமாவது இருக்கக் காண்பது அரிதே; இஃது இன்றும் இருக்கும் இயல்பு. இவ்வியல்பு இந் நாட்டிற்கு மட்டும் ஏற்புடையதன்று: இஃதோர் உலகியல்; உலகப் பெருங்கவிகள் அனேவரும், வறுமையில் வாடி மறைந்தாராகவே மாநில வரலாறுகள் அறிவிக்கின்றன. தாம் செல்வத்தில் திளைத்துச் செருக்குடன் வாழ்ந்ததாக எந்தப் புலவரும் கூறியதாகத் தமிழ் நூல்கள் அறிவிக்கவில்லை. பெரும்பாலான அவர் பாடல்கள் அவர்தம் வறுமைநிலையைப் பல்வேறு வகையில் விளக்கிக் காட்டவே பாடப்பட்டுள்ளன;