பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 ஒளவையார்

ஔவையார், தம் வறுமை நிலையை விளக்க, நீர்ப்பாசின் வேர்போல் நெகிழ்ந்து கிழிந்துபோன தம் உடைகளையும் எண்ணெயும் தண்ணீரும் கண்டு எத்தனேயோ நாள் ஆகிய காரணத்தாலும், விட்ட வியர்வைநீர் துடைக்கப் பெறாமல் வற்றிப்போனதாலும் புலால் நாற்றம் நாறும் தம் தலையையும் காட்டும் காட்சி கழிவிரக்கம் தருவதாகும்! "என்னரை, முதுநீர்ப்பாசி அன்ன உடை களைந்து,” “பாசி வேர் புரை சிதாஅர் நீக்கி", "புலவுகாறும் என்தலை". வறுமையில் உழலும் வாழ்வில்தான் செந்தமிழ்ப் பாக்கள் செழிக்கத் தோன்றுகின்றன போலும்!

வறுமையில் வாடிய ஒளவையார், தம்பாடல் பெருமையால், தமக்கொரு வாழ்வு முறையை வகுத்துக் கொண்டார் எனின், அவர் தம் சுற்றத்தை மறந்து தம் வாழ்வு ஒன்றையே கருதுபவர் அல்லர். "தக்கவன் ஒருவன் வாழத் தன் கிளை வாழும்” என்பர் பெரியோர் . ஒளவையாரைச் சூழ வாழும் சுற்றம் பெரிது; ஒளவையாரும், *தாம்பெற்ற பேறு, பெறுக இவ்வையகம்” என்னும் உயர்பேருள்ளம் உடையாராதலின், அரசரை அண்டி, அரண்மனை வாழ்வுபெற்று, அவ்வரசரோடிருந்து இன் சுவை உணவு உண்ணும் அக்காலத்திலும், தம் சுற்றத்தை, மறப்பவரல்லர் அதியமான் அஞ்சியோ டிருந்தகாலை, தம்மையே எண்ணி ஏங்கி இருக்கவும் ஒர் இடம் இன்றி, ஊர்ப் பொதுவிடத்தையே உறைவிடமாகக் கொண்டு, வாழும் தம் சுற்றத்திற்கு ஆம் வகையில் செந்நெற்குவியல் பல கொடுக்குமாறு அஞ்சியை அவர் வேண்டினர்; அவனும் அவ்வாறே அளித்து அருளினன்.

                     "முன்னூர்ப் பொதியில் சேர்ந்த, மென்னடை
                      இரும் பேரொக்கல் பெரும்புலம்பு அகற்ற 
                      பகடுதரு செந் நெல் போரொடு நல்கிக் 
                      கொண்டி பெறுக என்றோன்.” 
                                                (புறம்: ௩௯0)  

(5) அவர் அறிந்த நாடுகள்:

ஒளவையார், தமிழகம் முற்றும் சுற்றிப் பார்த்தவர்; அவர் செல்லாத நாடு இல்லை; ஒவ்வொரு நாட்டிற்கும்