பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒளவையார் வரலாறு 17

நேரில் சென்று அந் நாட்டின் பரப்பு, செல்வச் சிறப்பு, மக்கள் பண்பு முதலாயின அறிந்துள்ளார் அவர்; சேர, சோழ, பாண்டிய நாடுகள் என முப்பெரும் பிரிவாக இருந்த தமிழகம், அவர் காலத்தில் மேலும் பல நாடுகளைக் கொண்டதாகப் பிரிக்கப்பட்டிருந்தது; அவர் காலத்திற்கு முன்பே, தொண்டைநாட்டுப் பிரிவினே தோன்றிவிட்டது; நாஞ்சில் நாடும், தமிழகத்தின் ஒரு பிரிவே எனத் தழுவப்பட்டிருந்தது; ஒளவையார், சோழநாட்டில் உள்ள கிள்ளி என்பானுக்குரிய வெண்ணி என்ற ஊரையும், அவ்வூரில் உள்ள பொய்கையையும், அதில் வாள்போல் பிறழும் வாளைமீன்களையும், அம் மீன்களைப் பிடித்து உண்ணக் காலம் பார்த்துக் கரையில் நிற்கும் நீர்நாய்களையும், அவ்வூரைச் சூழப் பரந்துகிடக்கும் வயல்களையும், அவ் வயல்களில் வளர்ந்து படர்ந்திருக்கும் ஆம்பற்கொடிகளேயும் பார்த்து மகிழ்ந்துள்ளார்;

           "வாளை வாளிற் பிறழ நாளும்
            பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
            கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த 
            வயல்வெள் ளாம்பல்.’ 
                                    (நற்.௩௯0)

சேரனுக்குரிய கொல்லிமலை அவருக்குத் தெரியும்; பெருமழை பெய்வதால் பெருகி ஒடும் அம் மலையருவிகளின் இன்னோசை கேட்டு மகிழ்ந்ததும் உண்டு.

                    “............... பொறையன்
                     கார்புகன்று எடுத்த, சூர்புகல் நனந்தலை 
                     மாயிருங் கொல்லி உச்சித் தாஅய்த்
                     ததைந்துசெல் அருவி.” 
                                    (அகம்: ௩0௩)

பாரிக்குரிய பறம்புமலையும் அவர் பார்த்துப் பாராட்டியதே; தொண்டைநாடு சென்று அந் நாட்டு அரசன் தொண்டைமானிடம் தூதுரைத்து மீண்டு வந்துள்ளார்: நாஞ்சில்நாட்டில் பெருவள்ளலாய் விளங்கிய நாஞ்சிற்பொருநனைப் பாராட்டிப் பரிசில் பெற்றுள்ளார். மேலும்

ஒள.-2