பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 ஒளவையார்

சேரமான் மாரிவேண்கோவும், பாண்டியன் *கானப்பேர் கடந்த உக்கிரப்பெருவழுதியும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்</sup> ஒருங்கிருந்தவழி, அவர்களைப் பாராட்டி, அறிவுரை பல கூறி, அவர்கள் நட்புவளர வாழ்த்தி வந்துள்ளார். இவ்வாறு நாடுபல சுற்றி, ஆங்காங்கே நல்ல நண்பர் பலரைப் பெற்றுள்ள பெருமையாலன்றோ, அதியமான் பரிசில் நீட்டித்தவழி, "உலகம், அறிவும் புகழும் உடையோர் அனைவரையும் இழந்து விடவில்லை; நாங்கள் எங்கே செலினும், அங்கெல்லாம் எம்மை அன்புடன் வரவேற்றுச் சோறு அளிப்பார் உளர்", என்று பெருமிதம் தோ றக் கூறி வெளியேற முடிந்தது! மேலும், நாடனைத்தையும் நன்றாகச் சுற்றிப்பார்த்துப் பழகிய காரணத்தாலேயே, ஒவ்வொரு நாடும் எவ்வெப் பொருளாற் சிறந்தது என்பது தோன்ற,

       "வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க
        சோழ வளநாடு சோறுடைத்து:-பூழியர்கோன் 
        தென்னாடு முத்துடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை
        நன்னாடு சான்றோர் உடைத்து".

என்ற பாடலைப் பாட முடிந்தது அவரால் என்று கூறுவாரும் உளர்.

(6) வாழ்ந்த காலம்:

தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப்படும் சங்ககாலமே ஒளவையார் வாழ்ந்த காலமாகும்; சங்க காலம், கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்றும், ஐந்தாம் நூற்றாண்டு என்றும் இருவிதமாகக் கூறுவாரும் உளர். எனினும் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றுகள் எல்லாம், சங்ககாலம் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதையே உறுதி செய்கின்றன ஆதலின், சங்ககாலப் புலவராகிய ஒளவையார், அவ்விரண்டாம் நூற்றாண்டில்


  • கானப்பேர்-காளையார் கோவில்; இது பாண்டிய காட்டில் உள்ள பதினான்கு தலங்களுள் ஒன்றாக இற்றைகாளில் அமைந்து விளங்குகின்றது.