பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

21

வுண்மைகளை உணர்ந்தவர் ஒளவையாராதலின், அவர்தம் பாடல்கள் அருமை பெருமை வாய்ந்தனவாகவும், 'குழந்தைகளின் மழலைமொழி, யாழ்போல் இனிய ஓசையுடையதா என்றால், இல்லை; அல்லது, பொருள் செறிந்து பயன் அளிக்கும் சொல்லா எனின், அதுவும் இல்லை; என்றாலும், அம்மழலை, பெற்றோருக்கு இன்பம் பயக்கிறது: குழல், யாழ் ஓசைகளினும் இனியது, தம் குழந்தைகள் மழலை எனப் போற்றுகின்றனர் பெற்றோர்; காரணம், அப் பெற்றோர் தம் குழந்தைகள் மாட்டுக் கொண்டுள்ள அன்பே, அதைப்போல, என் பாடல், பிறர் பாராட்டும் அளவு பெருமையுடையது அன்று அவர்கள் பாராட்டுகின்றனரே. எனின், அது பாட்டின் பெருமை கண்டன்று; என்பால் அவர்கள் கொண்டுள்ள அன்பு கொண்டு" என்று கூறுகிறார் அவர். எவ்வளவு தன்னடக்கம் பாருங்கள்!

 
           "யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
            பொருளறி வாரா; ஆயினும் தங்தையர்க்கு
            அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
            என்வாய்ச் சொல்லும் அன்ன ;" (புறம் : ௯௨)
                                           

(௩) வீர உணர்ச்சி

இவ்வளவு அடக்கம் உடையாரே எனினும், அக்கால மகளிர்க்கு இயல்பான வீர உணர்ச்சியில் சிறிதும் குறைந்தவரல்லர் ஒளவையார்; அதியமான் படைக்கலச் சிறப்பைப் பகைவர்க்கு எடுத்துக் கூறி, "ஒடி உய்ம்மின்” என அறிவுரை கூறிய வழியெல்லாம், ஒளவையார்தம் வீர உணர்ச்சி, பொதுவாக வீறுகொண்டெழக் காண்கின்றோம், என்றாலும், அவ்வீர உணர்ச்சி, வெள்ளம் என வெளிவரும் பாடல் ஒன்றும் உண்டு; வீரப்புண் பெற்று மாண்டாரொருவரைக்குறித்து மகிழ்ந்து கண்ணீர்விடும் நிகழ்ச்சியைக் குறிக்கும் உவகைக் கலுழ்ச்சி என்ற துறைக்கு எடுத்துக் காட்டாக அவர் பாடிய பாடல் ஒன்றினேப் பாருங்கள் ! கடல் போன்று இடமகன்ற பாசறை, அதன் நடுவே ஒரு