பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒளவையார் வரலாறு

23



வாடுமுலை யூறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே" (புறம்: ௨௯௫)

(௪) புலவரைப் பாராட்டல்

ஒரு புலவர், இன்னொரு புலவரை மதிப்பது அரிது : புலவர் காய்ச்சல் என்பது புலவர் எல்லாரிடத்தும் பொருந்தி நிற்கும் பண்பாகும் என்ற பழியுரைகளைப் புலவர்கள்மீது சூட்டுவோர், ஒளவையார் வரலாற்றையும், தம் காலத்தே வாழ்ந்த பிற புலவரிடத்தே அவர் கொண்டிருந்த மதிப்பையும் அறிதல் வேண்டும்; புலவர்கள், அப் புலமையைப் பெற எவ்வளவு பாடுபடுதல் வேண்டும் என்பதை விளங்க உரைத்துள்ளார் ஒளவையார்; சொற்களுள் செஞ்சொற்கள் யாவை என்பதை நுண்ணிதாக ஆராய்ந்து மேற்கொள்ள அப் புலவர்கள் பட்டபாடுதான் என்னே!' என்ற அருமை தோன்ற, அழகிய சொற்களை ஆராய்ந்தறியும் நுண்ணிய ஆராய்ச்சியோடு கூடிய அறிவுடையோர்- "அஞ்சொல், நுண்தேர்ச்சிப் புலவர்"- என அப் புலவர்களேக் குறிப்பிடுங்கால் சிறப்பித்துக் கூறி யுள்ளார்; அம்மட்டோ! அப் புலவர்தம் நாக்கினைப் பற்றிக் கூறும்பொழுது, செவ்விய நாவினை உடைய புலவர் - "செந்நாப் புலவர்" எனச் சிறப்பிக்கிறார்; நாவிற்குச் செம்மையாவது வாழ்தல் வேண்டிப் பொய் கூறாமையும், பொருள் செறிந்த செய்யுள் செய்தலும் ஆம் என்பர் அறிவோர்; ஆகவே, புலவர்களைச் செந்நாப் புலவர் எனப் பெயரிட்டு அழைத்து, அவர்கள் பொய்கூறாப் பெருந்தகையார் என்றும், பொருள் செறிந்த செய்யுள் செய்யும் சிறப்புடையார் என்றும் புகழ்ந்துள்ளார் ஒளவையார்.

பெண்களுக்குரிய குணங்களுள் ஒன்றாகிய நாண் பற்றிக் குறிப்பிடவேண்டி வந்தது ஒளவையாருக்கு; இந்நாணைக் குறித்து முன்னரே புலவர் பலர் புகழ்ந்து கூறியுள்ளது. அவருக்கு நினைவு வந்தது; "உயிரினும் சிறந்தன்று நாண்" என்று கூறினர் தொல்காப்பியர்; "தாயிற் சிறந்தன்று நாண்" என்றார் திருக்கோவை ஆசிரியர்;