பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24

ஒளவையார்

ஆகவே புலவர்கள் உயிரினும் சிறந்தது, காயினும் சிறந்தது எனப் பாராட்டியதற்கு மேலும், அந்நாணைத் தாமும் பாராட்டல் மிகையாம் என்று எண்ணுகிறார்; என்றாலும் அந்நாணைப் பாராட்டாமல் விடுதல் அவர்க்கு இழுக்காம் என்றும் எண்ணுகிறார்; நாணைப் பாராட்டவும் வேண்டும்: தாமும் பாராட்டி, அதனால், புலவர் பாராட்டியது போதாது; தன்னுடைய பாராட்டும் தேவையாக இருந்தது என்று தோன்றச் செய்து, புலவர்க்கு இழுக்கு உண்டாக்கவும் கூடாது; இஃது அவர் உள்ளம்; இதற்கு வழி யாது? அதற்கு அவர் கண்ட வழி அருமை வாய்ந்தது: நாணையும் பாராட்டினார்; புலவர்க்கு இழுக்கும் தேடவில்லை; மாறாக அவர்களையும் பாராட்டினர். அஃது எவ்வாறு முடிந்தது. அவரால் "புலவர் புகழ்ந்த நாண்” என்றார். புலவர் புகழ்ந்த என்ற அடை, எளிதில் யாரையும் புகழாத புலவர், புகழ்ந்த சிறப்பினை உடைய நாண் என, அந் நாணிற்கும் சிறப்பளித்தது; புலவர் புகழ்ந்து கூறியதாலேயே நாணிற்குப் புகழ் உண்டாயிற்று எனப் பொருள்படுதலால், புகழ்ந்த புலவர்க்கும் சிறப்பளித்தது; இவ்வாறு வாய்க்குமிடம் எங்கும் புலவர் புகழைப் போற்றாதுவிடார் ஒளவைார்.

இவ்வாறு, பொதுப்படையாகப் புலவர்களைப் புகழ்ந்ததோடு அமையாது, கபிலர், பரணர், வெள்ளிவீதியார் போன்ற பெரும் புலவர்களைப் பெயர் கூறிப் பாராட்டியும் உள்ளார்; மன்னன் கரிகால் வளவன் மகளாகிய ஆதிமந்தி என்பார், காவிரியில் மறைந்து மாண்ட தம் கணவனைத் தேடி, ஊர் ஊராக அலைந்து திரிந்தனர்; அவ் வாதிமந்தியாரைப் போன்றே, வெள்ளிவீதியாரும் கணவரை இழந்து அலைந்து திரிந்தனர்; இதை அவரே கூறி அழுது பாடியுள்ளார்: கல்லிசைப் புலமை மெல்லியராகிய வெள்ளிவீதியார்தம் வாழ்வில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சி, ஒளவையார் உள்ளத்தை அலைத்து வாட்டுவதாயிற்று; அவர்பால் தாம் கொண்டிருந்த இரக்க உணர்ச்சியை வெளியிடுதற்கான ஏற்ற இடத்தைத் தேடிப் பிடித்து வெளியிட்டுள்ளார் ஒளவையார்; பொருள்வயிற் பிரிந்துவிட்டான் தலைவன்;