பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

29

நிற்கும் செந்நெற் கதிர்கள், நெருங்கி வளர்ந்து முற்றியிருப்பதால், கனத்துத் தலைதுாக்கி நிற்கமாட்டாமல், வயலைச்சூழ உள்ள வரம்புகளில் வளைந்து வீழ்ந்துகிடக்கும் வளம் அவர் கண்முன் காட்சியளிக்கிறது. இவ்வளவு வளம் பொருந்திய அந்நாடு, அந்தோ! நாளை முற்றும் அழிந்துபோய்விடுமே!" என்று எண்ணியதும் அவர் இதயம் நடுங்கிற்று; 'அந் நாடு அழியவேண்டியதுதானா? அதைத் தடுப்பார் யாரும் இல்லையா?' என ஏங்குகிறார்: அவர்தம் ஏக்கம்,

"இரங்க விளிவது கொல்லோ! வரம்பணைந்து
இறுங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனற் படப்பைஅவர் அகன்றலை நாடே"
                                                                    (புறம்: ௬௮)

என்ற அடிகளில் தோன்றி வெளிப்படல் காண்க.

இவ்வாறு நாடழிவது கண்டும், அதைத் தடுக்கச் செய்வதொன்றும் அறியாது, "அந்தோ!" என்று இரங்கிப் பெருமூச்சுவிட்டு அடங்கும் இயல்பினர் அல்லர் ஒளவையார். இவ்வழிவைத் தடுத்தே ஆகவேண்டும் என்று எண்ணினார். அதற்குவழி, அக்கால அரசர்கள் ஒருவரோடு ஒருவர் பகையின்றிக் கலந்துவாழ வழிசெய்வதேயாம் என்பதையுணர்ந்தார்; பகை வளர்வது, பற்றாமை காரணமாக; பற்றாமை எண்ணம், பொருள்கள் நிலைபேறுடையன; அவற்றைப் பெரும் அளவில் சேர்த்துவைத்தலே செல்வர்க்கழகு என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது: அடிப்படையில் நிகழும் இத் தவற்றினப் போக்கிடின், எல்லாம் நன்றாம் என்று எண்ணினார்; தமிழ் அரசர்களுள் பேரரசர்களாக விளங்கியவர், சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தராவர் : இவர்கள் மூவரும் பகையின்றிப் பண்புடன் பழகி வாழத்தொடங்குவரேல். தமிழ்நாட்டில் போரே இராது. மூவேந்தர்கள் தங்களிடையே ஒற்றுமையின்றிப் பகைத்து வாழ்வதாலேயே குறுநிலமன்னர் பலர் தோன்றவும், அவர்களும் போர் மேற்கொள்ளவும் செய்கின்றனர். ஆகவே, அப் பேரரசர்களிடையே தோன்றும்