பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஒளவையார்

பகையை முதற்கண் போக்கவேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆகவே, அவர்கள் மனத்தே நிலையாமை எண்ணத்தைப் புகுத்தி, அதன்வழியே பொருள்கள் மேற்றோன்றும் ஆசையும், அவ்வாசை காரணமாக எழும் பற்றாமை உணர்வையும், அப் பற்றாமை காரணமாகத் தோன்றும் பகையுணர்ச்சியையும், அப் பகை காரணமாக விளையும் நாடழிவினையும் தடுக்க முயன்றுள்ளார் ஒளவையார்.

ஒளவையார் காலத்தே வாழ்ந்த மூவேந்தர்களாகிய சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும். இராசசூயம் வேட்ட பேருநற் கிள்ளியும் ஒருசமயம், பகையின்றிக் கலந்து ஒரிடத்தே இருந்தனர்; அவ்வொற்றுமை ஒளவையார் உள்ளத்தே உவகைப் பெருக்கையும், இவ்வொற்றுமை இன்றேபோல் என்றும் நிலைபெற்று வாழாதா என்ற ஆசையையும் எழச்செய்தன. பகையின்றிக் கூடியிருக்கும் அக்காலமே, அவர்க்கு அறிவுரை கூற ஏற்ற காலமாம் என எண்ணினார்.

அவரை அணுகி, "நான் அறிவிற் சிறந்தவள் என்பதைத் தாங்கள் மூவரும் உணருகிறீர்கள் ஆகவே, நான் உண்மை என அறிந்து கூறுவனவற்றை ஏற்றுக்கொள்வீர்களே அன்றித் தள்ளமாட்டீர்களே” என அவர் ஒப்புதல் பெற்று, 'நான் நூல்பல கற்றும், நாள்பல வாழ்ந்தும் அறிந்த உண்மை இது" 'யான் அறி அளவையோ இதுவே' என்று,

"நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே ஆயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்"
.............................
வாழச்செய்த நல்வினை யல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை"
                                                             (புறம்: ௩௬எ) 

என்ற நிலையாமை நினைவுகள் அவர் நெஞ்சிடைத் தோன்றுமாறு செய்தார்.