பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

31

 இவ்வாறு மூவேந்தர் மனத்தே நிலையாமையுணர்வு தோன்றச்செய்து, அதன் வழியே நாடு அழிதல் இன்றி, அமைதிவாழ்வு காணமுயன்ற ஒளவையார்தம் அருள் உள்ளம் அறிந்து பாராட்டத் தக்கதாம்.

(எ) அறிவுரை கூறல்

நிலத்தியல்பால் நீர் திரியும்; கலந்தீமையால் நன்பால் திரியும் என்பது எல்லோரானும் ஒப்புக்கொள்ளப்பெறும் ஒருபொது இயல்; இடத்தின் தன்மைக்கு ஏற்ப, இடத்து நிகழ் பொருளின் தன்மை மாறும் என்பது உலகியல்; நீரின் தன்மையைக் காண விரும்புவோன், அது நிற்கும் நிலத்தின் தன்மையைக் கண்டால் போதும்; நிலம் நன்றாயின் நீர் நன்றாம்; நிலம் தீதாயின் நீரும் தீதாம்; பாலின் தன்மையை ஆராய்வோன், அப்பால் வைக்கப்பட்டிருக்கும் கலத்தை ஆராய்தல்வேண்டும், கலம் நன்றாயின் பால் நன்றாம் கலம் தீதாயின், பாலும் தீதாம்; நிலத்தைச் சென்றடைவதற்குமுன் நீர் நன்றாயினும் நிலத்தின் தீமையால் தானும் தீதாம்; கலத்தில் வைக்கப்படுவதற்குமுன், பால் நன்றாயினும், கலத்தின் தீமையால் பாலும் தீதாம். இவ்வுண்மையை மறுக்கிறார் ஒளவையார்.

இடம், இடத்துநிகழ்பொருள் ஆகிய இரண்டனுள், இடத்துநிகழ்பொருளின் ஆற்றலினும், இடத்தின் ஆற்றல் மிகுதியும் வலிவுடைத்து என்பது இதனால் பெறப்படும். அவ்வாறின்றி, நிலத்தின் ஆற்றல், நிலத்தில் வாழ்வோர் ஆற்றலினும் குறையுடையதாயின், வாழ்வோர் வழியே நிலம் செல்லும்! நிலத்தின்வழி வாழ்வோர் செல்லார்; வாழ்வோர், வாழும் இடம் ஆகிய இருபொருளினும், வாழ்வோர், அறிவும், ஆண்மையுமுடையராயின், வாழும் இடம், அவர்க்கு ஏற்ப மாறும்; அவ்வாறின்றி வாழ்வோர், அறிவும், ஆண்மையு மற்றவராயின், அவர் தாம் வாழும் நிலத்தைத் தமக்கு ஏற்றவாறு மாற்ற வகையற்று வாழும் நிலத்திற்கேற்பவே, தம்மை மாற்றிக்கொள்வர். தம் இயல்பிற்கேற்ப, தம்மிடை வாழ்வோரை மாற்றும் ஆற்றல்