பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

33

கொடுவிலங்கு வாழும் காடாகவாவது இரு; அன்றி, நீரோடையும், நெருப்பாறும் பிளந்த பெரும் பள்ளமாகவாவது இரு; அன்றிப் பனியும் பாறையும் சேர்ந்த மலை நாடாகவாவது இரு; அதைப்பற்றிக் கவலைக்கொள்வார் யாரும் இல்லே; உன் தோற்றம் ஒன்றையே கொண்டு, உன் இயல்பை மதிப்பிடும் அறிவற்றோர் அல்லர் நாங்கள்; நின்கண் வாழும் மக்கள், நல்லாண்மை உடைய நல்லோராயின், நீயும் நல்லை; அவ்வாறின்றி, அவர் தீயோராயின்: நீயும் தீயை, என்றே கொள்வோம்."

"நாடா கொன்றோ காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய ! நிலனே"
                                                                (புறம்: கஅஎ) 

என்று கூறுவார்போல், உலக மக்களுக்கு ஒர் அறிவுரை கூறுகிறார்: "உலக மக்களே ! உலகம் உங்கள் கையில்; அதை நன்மை நிறைந்த நல்லுலகமாக ஆக்குவதோ, அன்றி இன்னல்களுக்கிருப்பிடமான இருட்டுலகமாக ஆக்குவதோ எல்லாம் உங்களால்தான் முடியும்; உலகத்தால் ஒன்றும் இயலாது அஃது அசைவற்றது; அறிவற்றது: ஆகவே, அந்த உலகம் நல்லுலகம்; ஆகவே, அங்கு மக்கள் நன்மையடைகிறார்கள் இந்த உலகம் இழிவுடையது; ஆகவே, மக்கள் இங்கு இழிநிலை அடைகிறார்கள் என்று வேண்டாதன கூறி வீணராகி வாடாதீர்கள்; நல்லோர் வாழ்வால் இன்று நல்லுலகமாக நிற்பது, நாளை அந் நல்லோர் அற்றுத் தீயோர் வாழ்வராயின் தீயுலகமாக மாறும்; அதைப்போன்றே, இன்று தீயோர் வாழ்வால் தீயுலகமாக இருப்பது, நாளே, அத் தீயோர் அற்று நல்லோர் வாழ்வராயின் நல்லுலகமாக மாறும்; ஆகவே நிலத்திற்குத் தனக்கென நன்மையோ, தீமையோ இல்லை; எல்லாம் உங்கள் கையில்".

"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்"
                                                            ( நாலடியார்:௨௪௮)

ஔ - 3