பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

35

வனும், பெண்டிரிற் சிறந்தாள் ஒருத்தியும், தம்மோடு ஒத்த உறவினர் சிலரோடு கூடிச் சிறந்ததோர் வாழ்வு நடாத்தியதாகக் கற்பனை செய்துகொண்டு சிறந்த வாழ்வு எனப் புலவர்கள் சிந்தனையில் தோன்றிய வாழ்வுமுறை, அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகக் கூறி, அச் சிறந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு பாடலுள் அமைத்துப் பாடி, அப்படிப்பட்ட வாழ்வுமுறை, எக்கால மக்கள் வாழ்விலும் அமையவேண்டும் என விரும்பினர்: அவ்வாறு அவர்கள் பாடிய பாடல்களே, அகத்துறை தழுவிய பாடல்களாம். ஆகவே, அப்பாடல்கள், அப் புலவர்கள் விரும்பிய வாழ்வு நெறியினை வகுத்துக் கூறுவனவாம்: ஆதலின், ஒளவையார் பாடிய அகத்துறைப் பாடல்களை நோக்கின், அவர் விரும்பிய அகவாழ்வுநெறி நமக்குப் புலனாம்; ஆகவே, அப் பாடல்களுள் சிலவற்றைக் கண்டு, அவர் காட்டும் அகவாழ்வு நெறியினை மேற்கொள்வோமாக.

ஆடவரிற் சிறந்தான் ஒருவனும், பெண்டிரிற் சிறந்தாள் ஒருத்தியும், கண்டு, காதல்கொண்டு கலந்து உறவாடி வாழ்கின்றனர். அவர்தம் இன்பவிளையாட்டிற்கு ஒருநாள் இடையூறு ஒன்று உற்றது; அவன் வருதற்குமுன்னரே பெருமழை பெய்யத் தொடங்கிவிட்டது: அவன் அங்கே: இவள் இங்கே, துனேயின்றித் தனித்திருப்பதை அவளால் தாங்க இயலவில்லை; துணைவந்து சேர்வதைத் தடுக்கிறது அப் பெருமழை; அவள், தன் மென்மை, தனித்துறைவதால் உண்டாகும் துயரின் கொடுமை, அத் துன்பத்திற்குக் காரணமான மழையின் வன்மை ஆகியவற்றை உணருகிறாள்; உடனே மழையை நோக்கிக் கூறுகிறாள்; உண்மை வீரர், தன்னோடு ஒத்த வீரரோடே போர் புரிவர்; ஆனல், நீயோ, என்னேடு போர் தொடுக்கின்றனை; நான் ஒரு பெண்; தன்னைத்தான் காத்துக்கொள்ளும் வலியற்றவள்; ஆதலின் பிறர்துணை பெற்றே வாழவேண்டியவள். இப்போது நான், காக்கும் துணையற்ற நிலையில்; துனைவர் எங்கோ இருக்கிறார்; இவ்வளவு துயர்நிலையில் இருக்கும் என்னை வருத்துகின்றாய் நீ; நீயோ, பெரும்புகழ்படைத்த