பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

சங்ககாலத்துப் பெண்மணிகள் பலர் கல்வி கேள்வி வீரப்பண்பு முதலிய எல்லாத் துறைகளிலும் சிறந்திருந்தனர். ஒரு நற்றாய், தன் மைந்தனை வேல் கைக்கொடுத்துப் போர்முகத்துக்கு அனுப்புவளாயின், அவள்தன் வீரத்தறுகண்மையை யாதென்பது?

இத்தகையாள் போன்ற அக்காலப் பெண்களுள் தலைமணியாகத் திகழ்ந்தவர் ஒளவையாராவர். இவர் தமக்கென வாழ்ந்தாரில்லை; தமிழுக்காக அரசுமுறைக்காக காட்டு ஆக்கத்துக்காக அறமுறையைப் பரப்புதற்காக வாழ்ந்தவர். இச்சீரிய இவர் தம் நற்பண்புகளை அவர்தம் பாடல்களே நமக்கு அகச்சான்றாகக் காட்டுகின்றன.

இவர் தம் மக்கட்பண்பின் மாண்பையறிந்தே பேரரசர்களும் குறுநில மன்னரும் வள்ளல்களும் அறிஞரும் பிறரும் போற்றிப் பாராட்டினர். இவ்வகை மாட்சிமிக்கவரான ஒளவையார் வாழ்க்கை வரலாறு நம்மனோரால் நன்கறிதற்கியலாததாய் அவர் தம் வரலாற்றில் பொய்யொடுமிடைந்த மாசு மண்டிற்று. அப் போக்கை அவர் தம் பாடலாகிய அகச்சான்றொன்றே கொண்டு நெடுநுகத்துப் பகல்போல நடுநின்றாய்ந்து செப்பமான அரிய நூலாகப் புலவர், திரு. கா. கோவிந்தனவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள்.

இந் நூலை நன்முறையில் பதித்துச் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசையில் நான்காவதாக வெளியிட்டுள்ளோம். இவ்வரிசை நூல்களையும் தமிழ்கூறு நல்லுலக மக்கள் வாங்கிக் கற்று நற்பயன் எய்துவார்கள் என நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.