பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

45

தம் வறுமையிற் செம்மையாம் குணத்தில் பிறழார் என்பதும், திங்கள் தன்னிடத்தே உள்ள இருளைப்போக்க முயலாமல், உலகிருளைப் போக்குவதேபோல், புலவர்களும் தம் துயர் களைவதைக் கருதாமல், உலகமக்கள் உயர உழைப்பதையே கடனாகக் கொள்வர் என்பதும், ஞாயிற்று ஒளி கண்டு பொங்காத கடல், திங்கள்ஒளி கண்டு பொங்குவதேபோல், வேந்தர்தம் வில்லாற்றலால் பெறமுடியாத ஒன்றைப் புலவர்கள்தம் சொல்லாற்றலால் பெறுவர் என்பதும், திங்களைச் சேர்ந்த முயலும் பிறரால் தொழப்படுதல்போல், புலவரோடு சேர்ந்த அவர்தம் சுற்றத்தாரும் பிறரால் போற்றப்படுவர், பேணப்படுவர் என்பதும் பெறப்படும்; இனி, புலவர்க்குத் திங்களை உவமையாகக் கொண்டால், திங்கள்பால் உள்ள எல்லாக் குணங்களும் புலவர்பாலும் இருக்கும் எனக் கொள்ளுதல் கூடாது; உவமையெல்லாம் ஒருபுடை யொப்புமை யுடையனவே; புலிபோலப் பாய்ந்தான் எனின், அவனுக்கும், வாலும் நாலு காலும் இருக்கும் என எண்ணுதல் கூடாது; அது. போலவே, திங்கள், வாழ வேறு வழியின்றி வலிய வந்து இறைவன் தாளில் பணிந்து அடைக்கலம் அடைந்தது; ஆனால், புலவர்கள் அவ்வாறு வாழ வழியின்றி அரசர்களை அடைந்தனர் அல்லர்; அரசர்கள் ஏற்றுப் போற்றப் பெருமையோடு வாழ்ந்தனர் புலவர் என்பதும், திங்கள், தன்னிடையே கறையுண்டாய விடத்தும், அது கண்டு கலங்குவதின்றி வாழ்கிறது; ஆனால், புலவர்கள் தம் இடையே பழியுண்டாக வாழார் என்பதும் பெறப்படும். ஆக இப்பொருள் எல்லாம் அடங்க, "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி, நீலமணி மிடற்று ஒருவன் போல" எனச் சுருங்கச் சொல்லி, விளங்கவைக்கும் முறையால் உவமை கூறிய ஒளவையார் புலமைகலம் போற்றிப் புகழ்தற்குரியதாம்.

"ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத் தன்ன என்னை" (புறம்: ௧0௪).