பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

47

லேயே ஆற்றல் குறைந்துவிடாது என்ற குறிப்புத் தோன்ற, "களரில் நரி யடும்" என்று மட்டும் கூறாது, "காலாழ் களரில் நரியடும்” எனக் களருக்கு ஆற்றல் ஏற்றிக் கூறினர்.

ஆனால், அதிகன் புகழ் கூறவந்த ஒளவையார், அதியமானை முதலையோடும், அவன் பகைவரை முதலையால் ஈர்க்கப்படும் யானையோடும் ஒப்பிட்டார் எனினும், அம் முதலை நெடும்புனல் வாழ்முதலையும் அன்று : காலாழ் களரில் அகப்பட்ட யானையும் அன்று என்றே கூறியுள்ளார். முதலை, சின்னீரில் வாழ்வதே; பெருநீர்த் துணையினைப் பெற்றது அன்று; யானை அகப்பட்ட இடம் சிறிய நீர்நிலையே; காலாழ் களரில் அகப்பட்ட துன்ப நிலையால் துயருற்றதன்று. ஈர்க்கும் முதலேயும் ஈர்க்கப்படும் யானையும் நிற்கும் இடம், சிறுவர் காலிட்டு ஆடுவதாலேயே கலங்கிவிடும் அளவு குறைநீர் நிற்கும் நிலையே; அச் சிறு நீரால், முதலை வேறுவலி பெறுவதுமில்ல; யானை உள்ள பலம் குன்றுவதுமில்லை; முதலையின் ஆற்றல் ஒன்றினாலேயே யானையின் முழுப்பலமும் குன்றி அழியும்.

அதைப்போலவே, அதியமான் பெற்ற பிறர்துணையும் குறைவே. இடத்தால் பெற்ற பெருந்துணை உடையானல்லன்; அவன் பகைவர் பேராற்றல் பெற்றவரே; சூழ்நிலையால் ஆற்றல் குறைந்தவரும் அல்லர், பெருந்துணை பெற்று, குறைவலிப் பகைவரை வெல்ல எண்ணுபவன் அல்லன் அதியமான்; பிறர்துணை எதையும் பெறாமல் குறைந்த தன் துணை ஒன்றைக்கொண்டே, பிறிதொன்றால் தன்வலி குன்றிக் குறையாத பெரிய பகையையும் வெல்லும் பேராற்றல் வாய்ந்தவன் அதியமான் என்ற இப் பொருள் எல்லாம் தோன்ற, அவ்வூர்ச் சிறுவர்கள் கூடிக் காலிட்டு ஆடுவதாலேயே கலங்கிவிடும் அளவு குறைந்த நீரில் நின்றே, ஆற்றல் மிக்க யானையைக் கொன்று இழுக்கும் ஆற்றல் மிக்க முதலையோ டொப்பன் அதியமான் என்று உவமை கூறிய ஒளவையார் திறம் கண்டு மகிழ்தற்குரியதாம்.