பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஔவையார்

இல்லாமல், காற்றால் உதையுண்டே கடல் பல கடந்து ஒரு நாட்டினின்றும் ஒருநாடு போய்ச் சேரும் நாவாய்களைத் துணைகொண்டு புறநாட்டு வாணிபம் புரிந்தனர் அக்காலத் தமிழர்கள்; கடல்வாணிபம் மேற்கொண்ட தமிழர்கள், பல்வேறுவகைக் கைத்தொழிலாலும் சிறந்திருந்தனர்; எத்தொழிற்கும் இன்றியமையா இரும்பை, ஏற்ற பொருள்களாக ஆக்கித்தரும் இரும்புத் தொழிலாளரும் இருந்தனர்; அவர் பொதுவாகக் கொல்லர் என அழைக்கப் பெற்றனர்; அக் கொல்லர், தம் இரும்புத் தொழிற்சாலைகளை ஊரின் கோடியில், ஒதுக்குப்புறமாக உள்ள தனி யிடத்தே அமைத்துத் தொழிலாற்றுவர்; இவரேயன்றி நினைத்தால் நாள் ஒன்றிற்கு எட்டுத்தேர் செய்யும் ஆற்றல் வாய்ந்த தச்சரும் இருந்தனர்; காட்டுமரம் எதையும், ஏற்றவாறு பயன்படுத்தவல்ல முறைகளையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்; அவர்கள் கையாண்ட கருவிகளில், மழுப்போன்ற சில கருவிகளையும் ஒளவையார் அறிந்திருந்தனர்; தொழில் வளர்ச்சிக்குத் துணைபுரியும் இரும்புக் கொல்லரும், மரத் தச்சருமேயன்றி, வாழ்வின் பயன்பெற உதவும் அணிகள் பல ஆக்கித்தரும் பொற்கொல்லரும் பணிபுரிந்து வாழ்ந்து வந்தனர்; அவர்கள் தொழிற்சாலையையும், அத் தொழிச்சாலைக்கண் பொன்னை அறுப்பதும், வெட்டுவதுமாகிய தொழில்களை நிகழ்த்துழி, அக்கருவிகள் எழுப்பும் இன்னோசைகளின் இயல்பையும் அறிந்து பாராட்டியுள்ளார் ஒளவையார்; நுண்ணிய நூலால் மெல்லிய ஆடைநெய்யும் நெசவாளரும், அவர்கள் ஆக்கித்தந்த ஆடைகளை மாசுபோக்கி வெளுத்துத் தரும் வண்ணாரும் வாழ்ந்திருந்தனர். ஒளவையார் கண்ட தமிழகத்தில்; வெளுக்கும் பணியினப் பெரும்பாலும் அக் குல மகளிரே மேற்கொண்டிருந்தனர்; அவர்கள் உவர்நிலத்தே தோண்டிய கிணற்றுநீரில் ஆடைகளை வெளுத்துத் தருவர். .

இவ்வாறு தொழிலாலும், வாணிபத்தாலும் வளம் பெற்றுச் சிறந்த தமிழகத்தில், சேர, சோழ, பாண்டிய