பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

ஔவையார்

அச் சிறப்புப் பெயர்களோடு இயற்பெயர் இணைய அதியமான் நெடுமானஞ்சி எனவும், குலப்பெயர் தொடராது, சிறப்படை ஒன்றே தொடர, நெடுமானஞ்சி எனவும், இயற்பெயர் ஒன்றே தோன்ற அஞ்சி எனவும் அழைக்கப் பெறுவன்; சில இடங்களில், அவன் பெயர் எழினி எனவும் காணப்படுகிறது. இப் பெயர், பொதுவாக இவன் மரபைச் சார்ந்தோர்க்கும், இவன் பகைவராயினார்க்கும், வேறு பிறர்க்கும் வழங்கக் காண்கிறோம்; இப் பெயர்க்காரணம் யாது என்பது அறியக்கூடவில்லை; கடையெழுவள்ளல்களுள் ஒருவனாவன் எனப் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் பெருந்தகையாராலும், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாராலும் பாராட்டப்பெற்றவன் இவ்வதியமான் நெடுமானஞ்சியே; இவனைப் பாடிய புலவர் பலராயினும், பாரியைப்பாடிய கபிலர் போலவும், ஆயைப் பாடிய மோசி போலவும், இவன் புகழ் விளங்க விரிவாகப் பாடியவர் ஒளவையார் ஒருவரே.

நீண்ட பெரிய தேர்; தலை உயர்த்தி நடக்கும் மதம் மிக்க களிறு; விரைந்து செல்லும் குதிரை; வேலேந்திய வீரர் ஆகிய நால்வகைப் படைகளாலும் நிறைந்தது அதியமான் பெரும்படை; இந்நாற்படைகளே அன்றி, வாழ்வின் துணையென வில்லையன்றி வேறு கானாதவரும், எதிர்த்துவருவோர் எத்துணை ஆற்றல்வாய்ந்தோராயினும், இன்னல்விளைவித்து இயற்கையொடு இரண்டறக் கலக்கச் செய்யாதுவிடாத இயல்பினரும் ஆகிய மழவர் என்ற ஒருவகைப் போர்வீரர் குழுவையும் பெற்றிருந்தான். மேலும், இவ்வாறு பெரும்படைத் தலைவனாய் விளங்கியதோடு, அப்பெரும்படையைப் பணிகொள்ளும், பெருவீனாய், அதற்கேற்ற ஆற்றலும், ஆண்மையும், முழவெனப் பருத்த தோளும், முழங்கால் அளவும் நீண்ட கைகளும், அகன்ற வலிய மார்பும் கொண்ட, உறுதிமிக்க உடலமைப்பும் உடையவனாவன். தான் பெற்றிருந்த பெரும் படைத் துணையால், தன் நாட்டைச் சூழ ஆண்டிருந்த அரசர் அனைவரையும் வென்று திறைகொண்டு வாழ்வானாயினான்;