பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையாரால் பாடப்பெற்றோர்

63

தன் உண்மைநிலையை உயர்த்தி மதிப்பிட்டு விட்டானோ அறியேன்; எவ்வாறாயினும் ஆகுக; புலவர் தம் உயர்வை உள்ளவாறு உணரும் அறிவும், அவரை அன்புடன் ஏற்றுப் போற்றிக் காப்பதால் பெறும் புகழும் உடையவர் அனைவரும் அழிய, உலகம் வறுமை எய்திவிடவில்லை; ஆகவே, புறப்படுகின்றேன் வந்தவழிநோக்கி; மரத்தொழில் வல்ல மக்கள், ஏற்ற கருவிகளுடன், எந்தக் காட்டிற்குள் சென்றாலும், அவர்க்கு அக் காடுமுற்றும் பயன் அளிப்பதேபோன்று, நாங்கள் எங்குச் செல்லினும் மங்காது எங்கள் புகழ்; கற்றேர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு," என்று சினந்து கூறித் திரும்பினார்.

"வாயிலோயே! வாயிலோயே!!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும், உரனுடை உள்ளத்து,
வரிசைக்கு வருங்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!!!
கடுமான் தோன்றல், நெடுமான் அஞ்சி,
தன் அறியலன் கொல்? என் அறியலன் கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுத்தலே உலகமும் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை ;
மரங்கொல் தச்சன், கைவல் சிறா அர்
மழுவுடைக் காட்டகத் தற்றே !
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே."

(புறம்: ௨0௯)

அதியமான் காதிற்கு எட்டியது இச் செய்தி.

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது"

(திருக்குறள்: உசு)

என்பதை அறிந்தவன் அவன்; ஆகவே விரைந்தான் ஒளவை இருந்த வாயில் நோக்கி; அகமும், முகமும் மலர அன்புமொழி கூறி வரவேற்றான்.