பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

க. தோற்றுவாய்

உலக நிகழ்ச்சிகளே உற்று நோக்கின், முற்றிலும் மாறுபட்ட இரு பொருள்கள், ஒன்றையொன்று இன்றியமையாதனவாய் இணைந்து தொழில் புரிவதாலேயே, உலக வாழ்வு, வளமுற்று இன்பம் பெருகி இயங்குகிறது என்ற உண்மை உணரப்படும். அறிவுருவாகிய உயிரும் அறிவில்லா உடலும் மாறுபட்டனவே என்றாலும், அவை ஒன்றையொன்று இன்றியமையா நிலையில் ஒன்றுபடுவதாலேயே நம் வாழ்க்கை நடைபெறுகிறது. நுண்பொறிகளை ஆக்கித்தரும் அறிவு நூல் கைவரப்பெற்ற அறிஞரும், அந்நுண்பொறிகளை இயக்கும் கல்லா மக்களும் முற்றிலும் மாறுபட்டவரே எனினும், அவர் இருவரும் ஒன்றுபட்டு உழைப்பதினாலேயே, உலக மக்கள் வாழ்வு வளம் பெறுவதைக் காண்கிறோம். சட்டக்கலை தேர்ந்த திேயாளனும், படை பல பயின்று பெற்ற உடல் வலியுடையானும் முற்றிலும் மாறுபட்ட நிலையினரே எனினும், முன்னேன் மொழிவதைப் பின்னோன் ஏற்று நடப்பதாலேயே உலகில் அமைதி நிலவக் காண்கிறோம். அவ்வாறே, "இருவேறு உலகத் தியற்கை திருவேறு, தெள்ளிய ராதலும் வேறு,” என்பதற்கேற்பக் கல்வியும், செல்வமும் மாறுபட்ட பண்புடையனவே என்றாலும், கல்வியாளன் காட்டிய வழியில், செல்வம் உடையோன் செல்வதினாலேயே, உலக மக்கள் உயர்நிலை பெறுதலும் கூடும். ஆகவே, எந்த நாட்டில், எந்தக் காலத்தில், மிகுந்த கல்வியும், திரண்ட செல்வமும் ஒருங்கே பெருகி மண்டிக் கிடக்கின்றனவோ, அந்த நாடு