பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

ஒளவையார்

மகிழ்ந்து, அவனைப் பெரிதும் பாராட்டி, அவன் நெடுநாள் வாழ வாழ்த்தினர்; மருந்து முதலாயின அளித்து ஒருவரை வாழவைப்பதினும், நல்லோர் வாழ்த்துரை கூறிப் பிறரை வாழவைப்பதே சிறந்த முறையாம் என்பதை அறிந்தவர் ஆதலின் அவனை வாயார வாழ்த்தி வாழச் செய்தார். அதியமானின் செயற்கரிய இச்செயல், ஒளவையாராலேயே அன்றி வேறு பலராலும் பாராட்டும் பெருமை பெறுவதாயிற்று. "மால்வரைக், கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி, அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த, அதிகன்" என்று பாராட்டினார் இடைக்கழிகாட்டு நல்லூர் நத்தத்தனார்; "இனிய கனிகள் என்றது, ஒளவை உண்ட நெல்லிக்கனி போல அமிழ்தாவனவற்றை" என்று பாராட்டினர் பரிமேலழகியார்.

அதியமானுடைய அரசவைப் புலவராய் அமர்ந்து அவன் அன்பிற்குரியராய் இருந்த ஒளவையார், அவன் புகழ் பாடுவது, அதற்கு அவன் அளிக்கும் பரிசில் பெறுவது என்பதோடு அமைதிகொள்ள விரும்பினாரல்லர்; பாடிப் பிழைப்பது ஒன்றே புலவர்தொழில் எனக் கொள்ளும் குறுகிய உள்ளம் உடையாரல்லர் அவர்; தம்மை அன்புடன் ஆதரிக்கும் அரசனும், அவன் நாடுமேயன்றித் தமிழக முழுதுமே நல்வாழ்வு வாழ்தல் வேண்டும் என விரும்பி, அதற்குத் தம்மாலான தொண்டாற்றலும் தம் கடனே எனக் கொள்ளும் உயர் பேருள்ளம் உடையார் அவர்; ஆதலின், அதியமான் அரசியலிலும் பெரும்பங்கு கொள்வதை விரும்பி மேற்கொண்டார் அவர். அதியமான், போர் வேட்கை மிக்க பெருவீரனாய் இருத்தலின், அவனுக் குப் பகைவர் பலராயினர்; அப் பகைவரால் ஊறுநேருமே அவனுக்கு என எண்ணும்போதெல்லாம் அவர் உள்ளம் துணுக்குறும். ஆகவே, அப் பகைவர் படையெடுப்பு நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வதை அவர் பெரிதும் விரும்பினார்.

அதியமான் ஆற்றல் மிக்கவன்; ஆற்றல் மிக்க பெரும்படை உடையான்; ஆதலின், அவன் படைவலி காட்டி